நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த ஓராண்டிற்கு மேலாக போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் வறட்சி நிலவுகிறது. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில்  நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. குடிநீர் பற்றாக்குறை தொடர்பான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக குடிநீர் பற்றாக்குறை, குடிநீர் வழங்குவதில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். குடிநீர் பற்றாக்குறை தற்போது உள்ள சூழ்நிலையில் இருக்கும் குடிநீரை எவ்வாறு மக்களுக்கு பகிர்ந்து அளிப்பது என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.


தொடர்ந்து அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் பேசிய போது, முதல்வரின் உத்தரவுப்படி தென் மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை குறித்து ஆலோசனை செய்வதற்கு வந்துள்ளேன்.  நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 75 சதவீதம் அளவிற்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் அதிகமாகவும், ஒரு சில இடங்களில் மிகவும் குறைவாகவும் தண்ணீர் வழங்கப்படுவதை ஆய்வு செய்து சீரான விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடல் நீரை குடிநீர் ஆக்குவதற்கு அதிக அளவில் செலவாகிறது. தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஒட்டன்சத்திரம், மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகள் ராமநாதபுரம் மாவட்டம்  ஆகிய பகுதிகளுக்கு காவிரியில் இருந்து 4800 கோடி மதிப்பீட்டில் தண்ணீர் வழங்குவதற்கான திட்டப் பணிகள் தொடங்கியுள்ளது. உறை கிணறுகள் வறண்டு விடாமல் இருக்க மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உறை கிணறுகள் அமைத்தால் தடையின்றி தண்ணீர் வழங்க முடியும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இது போன்ற திட்டங்கள் தொடங்குவது  குறித்து முயற்சி எடுக்கப்படும். ஜல்ஜீவன் திட்டத்தில் இந்தியாவிலேயே சிறப்பாக தமிழ்நாடு செயல்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு மத்திய அரசு விருது வழங்கியது என்றார்




கூடங்குளம் பகுதியில் கல்வெட்டான் குழியிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது. தரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு  எழுகிறது என்ற கேள்விக்கு கூடங்குளம் பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கான புதிய திட்டங்கள் போடப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த பணிகள் முடிவடையும் என பதில் அளித்தார். நெல்லை மாவட்ட அணைகளில் போதிய தண்ணீர் இன்றி அணைகள் வறண்டு காணப்படும் சூழலில்  கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடிநீர் ஆலைகளுக்கு மிகக்குறைந்த விலையில் தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படுகிறது அது தடுத்து நிறுத்தப்படுமா என்ற கேள்விக்கு,  தண்ணீரே வழங்கப்படவில்லை என்று சொல்கிறேன், ஆனால் நீங்கள் போய்கொண்டு இருப்பதாக சொல்கிறீர்கள் அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க சொல்கிறேன் என்றார். தொடரந்து உறை கிணறு அமைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது என செய்தியாளர்கள் கூறியதற்கு, தனியாக அவர்கள் அனுமதி வாங்கி உறை கிணறு அமைத்து எடுத்து கொண்டு இருக்கும் பொழுது எப்படி தடுக்க முடியும். நாங்கள் நோட்டீஸ் வழங்கினால் நீதிமன்றத்திற்கு செல்வார்கள். நீங்கள் நல்ல வழியை சொன்னால் நாங்கள் கேட்கிறோம். தண்ணீரை குறைப்பதற்கு வேண்டுமானால் நீங்கள் சொல்வதை கருத்தில் கொள்கிறோம் என்றார். மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்றாலும் எவ்வித பணிகளும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை என குற்றம் சாட்டப்படுகிறது என்ற கேள்விக்கு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டங்களை உடனடியாக முடிக்க ஆணையரை அழைத்து உத்தரவிட்டார்.