நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு கழிவு மையம், அணு உலை பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என அணு உலைப் பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து ஆட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப. உதயகுமார் கூறும் பொழுது,




 


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமான ஆபத்தான பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளின் கட்டுமான வளாகத்தை ஒட்டி கடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு இரண்டு தூண்டில் வளைவு அமைத்துள்ளனர் எந்த வித அனுமதியும் பெறாமல். அதே போல சுமார் 156 ஏக்கர் செயற்கை நிலம் மன்னார் வளைகுடாவில் எந்த அனுமதியும் பெறாமல் உருவாக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஒழுங்காற்று மேலாண்மை சட்டத்திற்குப் புறம்பாகவும், மாசு கட்டுப்பாடு அதிகாரிகளின் அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு இது வந்ததா? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதை கவனிக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. எனவே சட்டவிரோத  இந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.




இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நேரிடையாக ஆய்வு செய்து அங்கு நடப்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது மொத்தம் 380க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் போடப்பட்டது, அதில் அனைத்தும் படிப்படியாக திரும்ப பெறப்பட்ட  நிலையில் இன்னும் 63 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது தமிழக முதல்வர் அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறுவோம் என வாக்குறுதி அளித்தார். இந்த வழக்குகளால் எங்கள் பகுதி இளைஞர்கள் கடவு சீட்டு பெற முடியாமல், தடையின்மை சான்று பெற முடியாமல் பரிதவிக்கின்றனர். எனவே அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். கூடங்குளத்தில் நடக்கிற சட்டவிரோத கட்டிடங்களை தடுத்து நிறுத்த வேண்டும், அணுக்கழிவு மையம் அமைக்கூடாது, அணு உலை பூங்கா அமைக்கக் கூடாது என்ற இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நெல்லையில் நடத்தப்பட இருக்கிறது  என்று தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண