திருநெல்வேலி அருகே தந்தையுடன் தகராறு செய்தவர்களை மகன் குடிபோதையில் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகர் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் சம்பக்கடை தெருவைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்(55) மற்றும் கணேசன் (54). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். இந்த சூழலில் இருவரும் நேற்று அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கங்கை முருகன் என்பவர் சுப்பிரமணியனுடன் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கேயே இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் மூன்று பேரும் டாஸ்மாக் கடையில் இருந்து கிளம்பி வீட்டுற்கு புறப்பட்டு உள்ளனர்.
அப்போது பரிசுத்த ஆவி தெருவில் வைத்து மீண்டும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் போது சுப்பிமணியன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் சேர்ந்து கங்கை முருகனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அந்த நேரத்தில் கங்கை முருகனின் மகன் மணிகண்டன் அந்த பகுதிக்கு வந்துள்ளார். இருவரும் சண்டையில் ஈடுபட்டதை கவனித்த கங்கை முருகனின் மகன் மணிகண்டன்(25) திடீரனெ தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசன் மற்றும் சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டி உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் இருவருக்கும் தலை, வயிறு, கை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே விழுந்து கிடந்துள்ளனர். மேலும் மணிகண்டனும் ஏற்கனவே அதிக மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை காவல் துறையினர் வெட்டுப்பட்ட சுப்பிரமணியம் மற்றும் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் கணேசனுக்கு பலத்த வெட்டு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மணிகண்டனின் தந்தை கங்கை முருகனை மட்டும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட வாய்தகராறு அரிவாளால் வெட்டில் முடிந்துள்ளது, இச்சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்