நாளை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தங்களுடைய படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். இந்தியாவில், நாளுக்கு நாள் ஒமிக்ரான்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் முழு ஊரடங்கு நாளை தமிழகம் முழுவதும் அமலாகிறது. அண்டை நாடான, சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தியாவில், கடந்த 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 7 மாதங்கள் முழு ஊரடங்கு அமலில் இருந்தன. முதலில், 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நாட்டு மக்களிடம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பிறகு, நோயின் தீவிரத்தால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். கிட்டத்தட்ட 7 முழு ஊரடங்கு அறிவிப்பால், ஏழை எளிய மக்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில், கொரோனா வைரஸ் தொற்று உருமாற்றம் அடைந்து இரண்டாம் அலையாக இந்தியாவை தாக்கியது. டெல்லி, மஹாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்த பிறகு, மீண்டும் இயல்புநிலைக்கு மக்கள் திரும்பினர். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த செப்டம்பர் மாதம் முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.நாடு தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்க நாட்டில், ஒமிக்ரான்வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தொற்று, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பரவி உள்ளது. தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான்பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இதுவரை 2000க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான்பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஒமிக்ரான்பரவலைக் கட்டுப்படுத்த உள்ளூர் அளவிலேயே கட்டுப்பாடுகளை விதிக்கும்படியும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளும்படியும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், கடந்த 6 ஆம் தேதி முதல், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கையும், வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் வழிபடத் தடையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கையும் அறிவித்தார். இதனால் இந்த ஆண்டு முழு நேர முதல் ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையான நாளை அமலாகிறது அதற்காக இன்றே ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் தயாராகி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில், ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, மீனவர்கள் இன்று கடலுக்கு சென்று நாளை மீன்களைப் பிடித்து கரை திரும்பும் போது முழு ஊரடங்கு காரணமாக வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வியாபாரிகள் மீன்களை வாங்க யாரும் வர முடியாத சூழல் ஏற்படுவதாலும், மேலும் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் மூடங்கியிருக்க போவதாலும், மீனவர்கள் பிடித்து வருகின்ற மீன்களை விற்க முடியாது என்பதால், மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லாமல் தங்களுடைய படகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.இதனால் ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தெரிவிக்கையில், கடந்த டிசம்பர் மாதம் 18,19 தேதிகளில் ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினம் பகுதிகளை சேர்ந்த 68 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அதிரடியாக சிறைப்பிடித்து கைது செய்தனர். அதனைக் கண்டித்து தொடர்ந்து 13 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். இந்த நிலையில், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின், கடந்த நான்கைந்து நாட்களாகத்தான் மீன் பிடிக்கச் சென்றோம். ஆனால், தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு காரணமாக இன்றும் நாளையும் நாங்கள் கடலுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என கூறினர்.