சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பை அடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இன்று காலை வரை நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலான மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதோடு பல்வேறு இடங்களில் வானம் மேக  மூட்டத்துடன் காணப்படுகிறது.


மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையளவு:


 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம் அணை பகுதியில் 50 மில்லிமீட்டர் அதாவது 5 செமீ மழை பொழிவு பதிவாகியுள்ளது. அதேபோல மணித்தாறில் 9.80 மி.மீட்டரும், சேர்வலாறு அணைபகுதியில் 28 மி.மீட்டரும் பதிவாகி உள்ளது. மேலும் அம்பாசமுத்திரத்தில் 2 மிமீட்டரும், சேரன்மகாதேவியில் 6.60 மிமீ, நாங்கு நேரியில் 5 மிமீ, பாளையங்கோட்டையில் 5.40மிமீ, ராதாபுரத்தில் 10 மிமீ, திருநெல்வேலியில் 1.40 மிமீ, கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 16.60 மிமீ, களக்காடு 12.40மிமீ, கொடுமுடியாறு அணை 23 மிமீ, மூலைக்கரைப்பட்டி 4மிமீ, மாஞ்சோலை 43 மிமீ, காக்காச்சி 66 மிமீ பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 103 மிமீட்டரும், ஊத்து பகுதியில் 78 மிமீட்டரும் என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 464.20 மீமீ என சராசரியாக 25.79 % மழை பதிவாகியுள்ளது.


அணைகளின் நிலவரம்:


மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 அணைகளில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 57.30 அடி நீரும், மணிக்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக சுமார் 338.50 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நெல்லை மாவட்டத்தின் மற்றொரு பிரதான அணையான 118 அடி கொள்ளளவு மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85 அடியை தொட்டுள்ளது. அனைத்து வினாடிக்கு 381.75 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  அதேபோல அணையிலிருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக சுமார் 345 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.  மேலும் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் 72.34 அடியும், 49.20 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையில் 12.50 அடியும், 22.96 அடி கொள்ளளவு கொண்ட நம்பியாறு அணையில் 13.02 அடியும், 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையில் 15.25 அடியும் நீர் இருப்பு உள்ளது. கடந்த 2023 ஆம் வருடம் இதே மே மாதம் 24 ஆம் தேதி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 24.75 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 66.15 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 48.29 அடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அணையின் நீர்மட்டம் 100% உயர்ந்து இருப்பது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில்  நெல்லை மாவட்டம் முழுவதும் பெய்யும் இந்த கோடை மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


இந்த நிலையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


 நெல்லை, தென்காசி மாவட்ட  அருவிகளின் நிலவரம்:


நெல்லை மாவட்ட களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்குட்பட்ட மணிமுத்தாறு அருவியில் நேற்று (23.05.24) காலை முதல்  நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அதே போல தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவிகளில் கடந்த ஒரு வார காலமாக  பராமரிப்பு பணி காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின் இன்று காலை அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து தற்போது அருவியில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நீக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டு சில மணி நேரங்களிலேயே மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.