தென்காசி மாவட்டத்தில்  சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி தொழில் கூலி உயர்வின்மை போன்ற இடர்களால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட விசைத்தறி தொழில், தற்போது நூல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் நூல் விலை சுமார் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதுதவிர அடிக்கடி நூல் விலை ஏற்றம், இறக்கம் காணப்படுவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விசைத்தறியாளர்களுக்கு துணி உற்பத்தி செய்ய ஜவுளி உற்பத்தியாளர்கள் போதிய அளவு நூல் கொடுக்க முடிவதில்லை எனவே விசைத்தறி தொழிலும், உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.




இந்த நிலையில், கடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் காட்டன் துணிகளுக்கு 5 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விசைத்தறி தொழில், மற்றும் துணி உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி.வரி உயர்வால் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட விசைத்தறி தொழில், ஜி.எஸ்.டி. விரி உயர்வினால் மேலும் பாதிப்படையும் என்பதால் விசைத்தறி உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே விசைத்தறி மற்றும் ஜவுளி தொழிலை காக்க மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்றும் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்நிலையில் நூல் விலையேற்றம் மற்றும் ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரி ஏற்றத்தால் மத்திய மாநில அரசை கண்டித்து சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 600க்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் தேரடி திடல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள், செங்குந்தர் முன்னேற்ற சங்கம், திருமுருகன் சிறு விசை தறி தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.




மேலும் இன்று  சங்கரன்கோவில், புளியங்குடி, சுப்புலாபுரம், சிந்தாமணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 10000க்கும்  மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மற்றும் அதன் தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.