நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வீடு புகுந்து சக மாணவர்களால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தப்பட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சகோதரி ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து மாணவனின் தாயாரை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் அம்பிகாவுடன் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "நாங்குநேரி பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை ஆகியோரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இருவரும் நலமுடன் உள்ளனர். அவர்களுக்கு நல்ல மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவன் இன்னும் சில நாட்கள் ஐசியூவில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


மாணவனின் உடலில் 21 இடங்களில் வெட்டுக்காயம் உள்ளது. வலது கை வலது காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. வலது தோளில் கொட்டுங்காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு அரிவாளை கொண்டு மூன்று பேர் சேர்ந்து மாணவனை வெட்டி உள்ளனர். இதில் ரத்தக்குழாய், தசைகள், எலும்பு, கை, கால் என அனைத்து பகுதியும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மாணவன் மீண்டும் இயல்பாக இயங்கும் வகையில் மருத்துவம் வழங்கப்பட்டுள்ளது. நல்ல முறையில் மருத்துவம் அளித்த மருத்துவர்களுக்கும் சிறப்பாக இந்த பிரச்சனையில் செயல்பட்ட அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி மாணவர்களிடையே நச்சுக் கருத்தை பரப்புவது புதிது அல்ல, மாணவர் மத்தியில் மதரீதியான ஜாதி ரீதியான மோதலை திட்டமிட்டு ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் திணிக்கிறது. இது போன்ற சக்திகள் இளைய தலைமுறைகளை பாதிக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்வதும், காவித்துணிகளை வழங்குவதும் தற்போது நடந்து வருகிறது.


பாதிக்கப்பட்ட மாணவனின் தாய்க்கு நல்ல வீடு வழங்க வேண்டும். மாணவர்கள் கல்வி பயில உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களை பாதுகாப்பாக மாற்றுப் பள்ளியில் படிக்க வைக்க அரசு ஆவண செய்ய வேண்டும். வேதம் புதிது படத்தில் பாரதிராஜா இறுதிக் காட்சிகளில் சொல்லியிருக்கும் காட்சிகள் தான் இப்போது  சுட்டி காட்ட வேண்டி உள்ளது. தீவிரவாத அமைப்புகளை கண்காணிக்க காவல்துறையில் தனி பிரிவு உள்ளது. போல் சாதிய ரீதியான பிரிவுகளையும் கண்காணிக்க தனி உளவு பிரிவை அரசு உருவாக்க வேண்டும். கந்துவட்டி கும்பல்களை அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளியூர், நாங்குநேரி பகுதிகளை வன்கொடுமை பகுதிகளாக அரசு அறிவிக்க வேண்டும். ஆணவக் கொலைகள், கந்துவட்டிகளால் ஏற்படும் வன்முறைகள் அதிகம் நடந்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி பகுதியில் ஜாதியின் பெயரால் நடந்து வரும் வன்முறைகளை அரசு கூடுதல் கவனம் செலுத்தி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென் மாவட்டங்களில் நடக்கும் சாதிய வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி வரும் 20 ஆம் தேதி  நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.