தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரில் கடந்த 1958-ஆம் ஆண்டு முதல் அரசு கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் வரலாறு முதல் நவீன அறிவியல் தொழில்நுட்பம் என சுமார் 26,678 பல வகையான நூல்கள் உள்ளன. இது தவிர தினசரி நாளிதழ்கள், 50-க்கும் மேற்பட்ட வார, மாத இதழ்கள் நூலகத்திற்கு வருகிறது. 1878 உறுப்பினர்களையும், 24 புரவலர்களையும் கொண்டு இந்த நூலகம் 63 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
புதூர் பேரூராட்சி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள 44 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் என பல தரப்பினை சேர்ந்த மக்களுக்கு இந்த நூலகம் ஒரு ஆல விருட்ச மரமாக செயல்பட்டு வருகிறது. புதூர் அரசு நூலகத்தினை பயன்படுத்தி போட்டி தேர்வுக்கு தயரான பலரும் இன்றைக்கு அரசு பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
63 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த நூலகம் தற்பொழுது வரை வாடகை கட்டிடத்தில் தான் இயக்குகிறது. முதலில் சில ஆண்டுகள் சிறிய கட்டிடத்திலும், அதன் பின்னர் தற்பொழுது இருக்கும் வாடகை கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தினை நாடி அதிகமாக மக்கள் வருவதால் ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் நாளுக்கு நாள் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலை உள்ளது. இவ்வளவு பெருமைகள் இந்த நூலகத்திற்கு இருந்தாலும் சொந்த கட்டிடம் இல்லமால் தற்பொழுது உள்ள வாடகை கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லை என்பதால் பல ஆயிர புத்தகங்கள் சாக்கு மூட்டைகளிலும், பெஞ்சுக்கு பின்புறம், மூளையிலும் என எங்கெங்கு சின்ன இடம் உள்ளதோ அங்கு எல்லாம் புத்தகங்கள் சொருகி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிகமாக வாசகர்கள் வருவதால் அமர்ந்து படிக்க முடியாத நிலை 5 அல்லது 6 பேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் தான் இட வசதி உள்ளது. பலர் வந்தாலும் அமருவதற்காக வசதியாக இருக்கைகள் வாங்கப்பட்டு இருந்தாலும், இட வசதி இல்லை என்பதால் அந்த இரும்பு சேர்களும் குப்பையில் கிடக்கும் நிலை உள்ளது. சாதாரண நாள்களில் இப்படி என்றால் மழைக்காலங்களில் அந்த நூலகத்தில் பணிபுரியும் ஊழியர் பாடு திண்டாட்டம்தான், மழைநீர் உள்ளே வந்து புத்தகங்கள் சேதமடையாமல் இருக்க படாத பாடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் சில நேரங்களில் மழைநீர் உள்ளே வந்து புத்தகங்கள் வீணாகிப்போகும் நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
1991-ஆம் ஆண்டில் தமிழகத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் நூலகங்கள் அனைத்து சொந்த கட்டிடத்தில் செயல்படவைப்பது அரசின் கொள்கை அன்று கூறப்பட்டாலும், புதூர் நூலகத்திற்கு தற்பொழுதுவரை சொந்த கட்டிடம் கிடைத்தபாடு இல்லை. புதூர் நூலகத்திற்கு அரசு சார்பில் சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தாலும் தற்பொழுது வரை வந்தபாடு இல்லை என்று வேதனையுடன் கூறுகின்றனர் புதூர் நூலக வாசகர்கள்
நூலக வாசகர் வரதராஜன் கூறுகையில் இன்றைக்கு வாசிப்புத்தன்மை குறைந்து வரும் நிலையில், புதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சமூக வலைதளங்கள், இணைய பயன்பாடு குறைவு என்பதால் இப்பகுதி மக்கள் நூலகத்தினை நாடி வருகின்றனர். வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகத்தில் போதிய இடவசதி இல்லை என்பதால், புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசு கோரிக்கை மனு அளித்து வருவதாகவும், ஒவ்வொரு அரசு அதிகாரி மற்றும் அரசு பிரதிநிதிகளிடம் மனு அளித்து எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் நூலகத்திற்கு அரசு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட நூலக அலுவலர் ரெங்கநாயகியிடம் கேட்டபோது, வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் புதூர் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கும் படி விளாத்திகுளம் தாசில்தாரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், 5 செண்ட் இடம் தருவதாக கூறியுள்ளனர். அவர்கள் தரும் இடத்தினை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும், தூத்துக்கடி மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் இயக்கும் நூலங்களுக்கு சொந்த கட்டடம் வேண்டும் என்று ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன். விரைவில் சொந்த கட்டடத்தில் நூலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
விஞ்ஞான வளர்ச்சியில் வாசிப்புத்தன்மை குறித்து வரும் நிலையில் பல கிராம மக்களின் அறிவு பசிக்கு ஊன்று கோலாக இருந்து புதூர் கிளை நூலகத்திற்கு அரசு விரைவில் புதிய கட்டிடம் கட்டி, புத்தகங்கள் வீணாக போவதை தடுக்கவேண்டும், சாக்கு மூட்டைகளில் உள்ள புத்தகங்கள் வாசகர்களுக்கு பயன்படும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.