நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை அருகே உள்ள செங்குளத்தில் நடந்தது. இதில் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் பேசினர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உள்ளாட்சித்தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த ஆலோசனைகளை தொண்டர்களுக்கு வழங்கினார். 



 

நெல்லை மாவட்டத்தில் நடைபெறுகின்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் என்பதை இந்த கூட்டம் எடுத்துக்காட்டுகிறது. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி 3 முறை முதல்-அமைச்சராக இருந்து சிறப்பான ஆட்சி நடத்தி உள்ளார். ஜெயலலிதா 30 ஆண்டு காலம் பொதுச் செயலாளராக இருந்து ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக மாற்றினார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் தமிழகத்துக்கு தேவையான பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். இந்தியாவில் நெல் உற்பத்தியில் தமிழகம் தான் சிறந்த மாநிலம் என்ற விருதைப் பெற்றார். பல்வேறு சாதனைகளையும் படைத்தார்.



 


2016 ஆம் ஆண்டும் தொடர்ந்து அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு ஜெயலிதாவின் சாதனை தான் காரணம். அதன் பின்பு 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்து தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை வழங்கினார். அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு இல்லாத மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. இருந்தாலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நமது சில கொள்கை முடிவாலும், தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளாலும் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றுள்ளது. ஆனால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம், பெட்ரோல்- டீசல் விலையை குறைப்போம், மாதம் 1000 பெண்களுக்கு கொடுப்போம் என்று அறிவித்த எந்த திட்டத்தையும் தி.மு.க. செயல்படுத்தவில்லை. தி.மு.க. ஆட்சியில் எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகிறது. 



 


எனவே நமது கட்சி தொண்டர்கள் வீடு, வீடாகச் சென்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நமது தொண்டர்களுக்காக அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். அதே நேரத்தில் தி.மு.க. ஆட்சியின் அவலங்களையும் எடுத்துக் கூற வேண்டும். அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டு ஆகிறது. இந்த 50 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த பெருமை அ.தி.மு.க.விற்கு உண்டு. இந்த இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்றி 100 சதவீத வெற்றியை பெற்று தர வேண்டும். இந்த வெற்றியை மெரினா கடற்கரையில் துயில் கொள்ளும் ஜெயலலிதாவின் காலடியில் சமர்ப்பிப்பது நமது லட்சியமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.