கோவில்பட்டி அருகே நாய் குறுக்கே விழுந்ததால் பைக்கில் சென்ற அரசு பஸ் டிரைவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபாநகரில் அரசு பஸ் டிரைவர் சீனிவாசன் என்பவர் பைக்கில் சென்று கொண்டு இருந்த போது நாய் ஒன்று குறுக்கே விழுந்ததால் சீனிவாசன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் சீனிவாசன் (46). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.இவர் நேற்று முன் தினம் வீட்டில் இருந்து தனது பைக்கில் கோவில்பட்டி நகருக்குள் சென்றுள்ளார்.




அப்போது தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென நாய் ஒன்று குறுக்கே விழுந்ததால் நிலைகுலைந்து போன சீனிவாசன் பைக் உடன் சாலையில் கவிழ்ந்து விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சீனிவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.




இந்நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லமால் சீனிவாசன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் குறுக்கே விழுந்ததால் படுகாயமடைந்து அரசு பஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று பல முறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இதுபோன்ற உயிழப்புகள் நடந்த வண்ணம் இருப்பதாகவும், இனியாவது நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கிடையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.