நடிகர் ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படம் வருகிற 8 ஆம் தேதி வெளியாகிறது. இந்த சூழலில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். கல்லூரி மாணவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அவரை வரவேற்றனர். அப்போது நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததோடு மாணவர்களுடன் மேடையில் ஏறி குத்தாட்டம் போட்டு கொண்டாடினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கேப்டன் படத்தின் டிரைலர் ஒளிபரப்பபட்டது. பின்னர் மாணவர்கள் மத்தியில் சிறிது நேரம் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.




அப்போது அவர் கூறும் பொழுது, “கேப்டன் திரைப்படம் முதலில் Creature feature in india என்றே சொல்லலாம். ஏனென்றால் கிரீச்சர் பிலீம் என்றாலே ஹாலிவுட் படங்கள் தான் நிறைய பார்த்திருப்பார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு விருப்பமான படங்கள் என்றால் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், உயிரினங்கள் போன்றவை தான் பிடிக்கும். அவர்கள் அந்த அளவிலேயே பார்த்துவிட்டனர். இதனால் நமக்கு மிகப்பெரிய சவால் என்னவென்றால் நாம் அதனை எடுக்கும் அளவில் மிகப்பெரிய பட்ஜெட் கிடையாது. அதை ஒரு காரணமாக வைத்து நம் படம் ஹாலிவுட் அளவிற்கு இருக்காது என்று சொல்ல முடியாது. நம்மிடம் இருக்கும் வளங்களை வைத்து அந்த அளவிற்கான ஒரு தரமான படத்தை கொடுக்க முடியும் என்பதற்கான படம் தான் கேப்டன் திரைப்படம். இந்த படம் வெறும் அந்த உயிரினத்தை வைத்து தானா என்று கேட்டால் அது இல்லை. டெடியில் எப்படி ஒரு கதைக்களம் இருந்ததோ அதே போல தான் இந்த படத்திலும் அந்த உயிரினத்திற்கு எமோசன், நட்பு என அனைத்தும் உள்ளது. எனவே இது ஒரு வித்தியாசமான முயற்சியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது தமிழகத்தில் எவ்வாறு வரவேற்கப்படும் என்ற அளவிற்கு இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. எனவே இது ஒரு புது முயற்சியில் எடுக்கப்பட்டு வெளிவரும் நாளுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.




மேலும், இந்த படத்திலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் தான் பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு படம் எடுக்க ஆகும் செலவை தாண்டிய செலவு தான் இந்த படம். காடுகளில் தான் அதிக நாட்கள் படம் பிடிப்பு நடந்துள்ளது. குறிப்பாக கேரளா, குலுமணாலி, ஊட்டி மற்றும் நாட்டின் எல்லைகளிலும் அதிக அளவில் இந்த படம் பிடிப்பு நடைபெற்றது. படத்தில் 75 சதவிகிதம் காட்சிகள் காடுகளில் தான் எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் திரைத்துறை பாதுகாப்பான சூழ்நிலையில் தான் உள்ளது. தமிழ் சினிமா தற்போது மிகப்பெரிய உச்சத்தில் தான் உள்ளது. உதாரணமாக விக்ரம் படம் இதுவரை சினிமாவில் பார்க்காத ஒரு வசூலை எட்டியுள்ளது என்றார்.




கடந்த காலங்களில் திரையரங்குகளில் காட்சிகள் மிக குறைவாக இருந்ததால் அதிக நாட்கள் படங்கள் ஓடின. ஆனால் தற்போது காட்சிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக அப்போது 100 நாட்களில் கிடைக்கும் வசூல் தற்போது இரண்டு நாட்களிலேயே கிடைத்து விடுகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து அரசியலுக்கு வருவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு அரசியலுக்கு வரும் அளவிற்கு எனக்கு மூளை இல்லையே என கிண்டலாக தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, தமிழகத்தில் ஜாதி ரீதியான திரைப்படங்கள் வெளிவருவது என்பது ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், அவர்கள் சொல்ல நினைக்கிறது என  ஒவ்வொரு விசயம் இருக்கும். அதனை நாம் ஏன் இப்படி நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்ப முடியாது என தெரிவித்தார்.