மழை எதிரொலி - புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை கடுமையாக பாதிப்பு - 6 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் சந்தையில் 1 கோடிக்கு கூட விற்பனையாக நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் பகுதியில் நேற்றிரவு முதல் காலை வரை பெய்த தொடர் மழையின் காரணமாக புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் தீபாவளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. வழக்கமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாககும் நிலையில் மழையின் காரணமாக 1 கோடி ரூபாய்க்கு கூட ஆடுகள் விற்பனையாகத நிலை ஏற்பட்டது. ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப கொண்டு சென்றனர். வழக்கமாக காலை 11மணிக்கு ஆடுகள் விற்பனை முடிவுடைந்து விடும் நிலையில் மதியம் வரை ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது
எட்டயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். புகழ்பெற்ற இந்த ஆட்டுச்சந்தைக்கு தூத்துக்குடி,நெல்லை,தென்காசி, மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், கோவை, சென்னை என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு வாங்குவதற்கு வியாபாரிகள் வாங்க வருவது வழக்கம். வாரம் தோறும் ரூ 1 முதல் 2 கோடி ரூபாய் வரையிலும், விழாக்காலங்களில் 2 முதல் 5 கோடி ரூபாய் வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் அடுத்தம் மாதம் 4 ந்தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று ஆட்டுச்சந்தை களைகட்டும் என்று ஆடு வளர்ப்பவர்களும், வியாபாரிகளும் நினைத்து இருந்த நிலையில் நேற்றிரவு முதல் எட்டயபுரத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்த காரணத்தில் ஆடுகள் விற்பனை மந்தம் ஏற்பட்டது. வழக்கமாக அதிகாலையில் 5 மணி முதல் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று 11மணிக்குள் ஆடுகள் விற்பனை முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இன்றைக்கு ஆடுகள் விற்பனை வெகுதாமதமாக தான் தொடங்கியது.
வழக்கமாக 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு வரும் நிலையில் இன்று 6 ஆயிரத்திற்கு குறைவாக தான் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. அதே போன்று ஆடுகள் விலையை வியாபாரிகள் மிக குறைவாக கேட்டதால், ஆடுகள் விற்பனை கணிசமாக தான் நடைபெற்றது. கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இன்று வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு தான் விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டது. மழையினால் ஆடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றதாகவும், மிகவும் குறைவான விலைக்கு ஆடுகள் கேட்கப்பட்டதால் ஆடுகள் விற்பனை கடந்தாண்டு போல் நடைபெறவில்லை என்றும், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 6 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்ற நிலையில், இன்றைக்கு ரூ1 கோடி ரூபாய்க்கு கூட விற்பனை நடைபெறவில்லை என்று ஆடுகளை விற்பனை செய்ய வந்தவர்கள் தெரிவித்தனர். மழையினால் இந்தாண்டு தீபாவளி தங்களுக்கு ஏமாற்றம்தான் என்று தெரிவித்தனர்.
நேற்று இரவு முதல் காலை வரை பெய்த மழையினால் ஆடுகளின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, காலையில் சீக்கிரத்தில் முடியக்கூடிய சந்தை மாலை வரை இருந்தது மட்டுமின்றி, விற்பனை இல்லமால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் ஆடுகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஆடுகளை வாகனத்தில்கொண்டு வந்த வாடகைக்கு கூட ஆடுகள் விற்பனை இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர். மகாவீர் ஜெயந்தியன்று தீபாவளி பண்டிகை வருவதால் கறிக்கடை திறக்க அரசு அனுமதி இல்லை என்ற அறிவிப்பும் விற்பனை மந்தத்திற்கு காரணமாகி விட்டது என்கின்றனர்.தீபாவளிக்கு கறிக்கடை உண்டா இல்லையா என்கிற குழப்பத்தினாலும் ஆட்டு வியாபாரம் இல்லைன்னு வியாபாரிகள் புலம்புவதையும் கேட்க முடிந்தது.