வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரு தினங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வந்த மழையால், மாவட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு, திருச்செந்தூர், ஆலந்தலை, சாத்தான்குளம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், வேம்பார் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில்  தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பெய்ய தொடங்கிய மழை இன்று வரை நீடித்து வருகிறது. தற்போது இரவிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை  பெய்து வருவதால் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளான ராஜீவ்நகர், தாளமுத்துநகர், கலைஞர் நகர், ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.


                                 


நேற்று இரவு  முதல் தூத்துக்குடியில் பெய்த தொடர் மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளான பிரையண்ட் நகர், ராஜிவ் நகர், கதிர்வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் இல்லாததால் மழை நீர் தேங்கி உள்ளது. தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் மோட்டார் பம்புகளை கொண்டு அகற்றும் பணியில் ஈடுப்பட்டு உள்ளது.


                                 


இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் முத்துநகர் விரைவு ரயில் தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்தினை சென்றடையும், கீழூர் ரயில் நிலைய தண்டவாளம் மழை நீரில் மூழ்கியதால் மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பயணிகள் மேலூர் ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர்.

                                 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக உப்பளப்பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டு உள்ள உப்பு அம்பாரம் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு உள்ளது. மழை கால நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது வரவேற்கக்கூடியது என்றாலும் அரசாணையாக வெளியிட்டு இந்தாண்டே நிவாரணம் வழங்க உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

                                  

 

மழையின் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை, மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை எச்சரிக்கை காரணமாக நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மழை தொடர்வதால் இன்றைய தினமும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.