தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்று உள்ளது. ஆடுகள் வரத்தும் அதிகமாக இருந்தது விலையும் அதிகமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். முக கவசம் அணிந்தால் மட்டும் ஆட்டு சந்தைகக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தை. விவசாயிகளிடம் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் வெள்ளாடு, சீனி வெள்ளாடு செம்மறியாடு உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம், வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தைக்கு மதுரை ,ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தென்காசி, நாகர்கோவில், தேனி, கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள். சாதாரண வாரங்களில் ஒரு கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும். பொங்கல் தீபாவளி ரம்ஜான் கிறிஸ்துமஸ் என பண்டிகை காலங்களில் 5 கோடி ரூபாய் முதல் 7 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடப்பது வழக்கம்.
இந்நிலையில் வரும் 3-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை நடைபெறுவதை முன்னிட்டு இன்று எட்டயபுரம் ஆட்டுச் சந்தை களைகட்டியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக சரிவர ஆடுகள் விற்பனை நடைபெறாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிகளவு ஆடுகள் வரத்தும் இருந்தன, விற்பனையும் இருந்தது.
சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் 7 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி 8,000 ரூபாயும் , ஜோடி ஆடு 15 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் முககவசம் அணிந்து இருந்தால் மட்டுமே சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆடுகளை வாங்க வந்த முத்தையா என்ற வியாபாரி கூறுகையில், ”கடந்த 2 ஆண்டுகளை விட இந்தாண்டு ரம்ஜான் பண்டிகையை வியாபாரம் நன்றாக இருப்பதாகவும், ஆடுகள் வரத்தும் அதிகம், விலையும் அதிகம், 7 முதல் 8 கோடி வரை வியாபாரம் நடந்து இருக்கலாம்” என்றார்.