நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (48). விவசாயி. இவரது மனைவி உச்சிமாகாளி (42). இவர்களுக்கு செல்வசூர்யா (17) என்ற மகனும், பவித்ரா (15) என்ற மகளும் உள்ளனர். செல்வசூர்யா இடைகாலை அடுத்த பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். அதே பள்ளியில் செல்வசூர்யாவின் சகோதரி பவித்ராவும் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி மதிய வேளையில் அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் செல்வ சூர்யாவின் நண்பர்கள் கையில் கயிறு கட்டியிருப்பது தொடர்பாக பிரச்சினை செய்து உள்ளனர். அதனை பார்த்த செல்வ சூர்யா பிரச்சினை வேண்டாம் என தடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது செல்வ சூர்யாவுக்கு ஆதரவாக இரண்டு மாணவர்களும், பிளஸ் 1 மாணவருக்கு ஆதரவாக அதே வகுப்பில் படிக்கும் பள்ளக்கால் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி உள்ளனர். இதில் கீழே கிடந்த கல்லை எடுத்து செல்வசூர்யாவை எதிர்தரப்பு மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது. அப்போது இடது பக்க காதில் காயம் ஏற்பட்டு பலத்த ரத்தம் கொட்டி உள்ளது. இதனை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே சமரசம் ஏற்படுத்தி அனுப்பி வைத்து உள்ளனர், செல்வ சூர்யா இரத்த காயத்துடன் வீட்டிற்கு சென்று உள்ளார். நடந்த தகவலை பெற்றோரிடம் சொல்லிய நிலையில் செல்வசூர்யாவை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று உள்ளனர், அங்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு செல்வ சூர்யா சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் மாணவர்கள் இடையே மோதல் நடந்தது குறித்து தகவல் அறிந்த பாப்பாகுடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். செல்வசூர்யாவின் தாய் உச்சிமாகாளி அளித்த புகாரின் பேரில் மூன்று பிளஸ் 1 மாணவர்கள் மீது 294 (b), 324, 506 (2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி முதல் பாளையங்கோட்டை அரசு மருத்துவானையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் செல்வசூர்யா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்வசூர்யா உயிரிழந்ததால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த மூன்று பிரிவுகளில் 294 (b) என்ற பிரிவை மாணவர் கொலை செய்யப்பட்டதால் 302 என கொலை வழக்காக பதிவு செய்து, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.
சாதி ரீதியான மோதலை தடுக்க மாணவர்களுக்கிடையே காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர், அதோடு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாதி அடையாள கயிறை கட்டக்கூடாது எனவும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது, இருப்பினும் இந்த சம்பவத்தால் மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பது பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கையே காட்டுகிறது, சாதி கயிறை கட்டிக்கொண்டு பள்ளிக்கு மாணவர்கள் பள்ளி வருவதை பள்ளி நிர்வாகம் கண்டித்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்திருக்க முடியும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.