கோவில்பட்டி அருகே கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்த முயற்சித்த சம்பவத்தில் மதபோதகர் ஈடுபட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை:


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு சுங்கச்சாவடி அருகே காவல்துறை தனிப்படை உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜ பிரபு, பிரைடரிக் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கண்டெய்னர் லாரியை திறந்து சோதனையிட்டபோது அதில் மேற்பகுதியில் ஒரு ரகசிய அறை இருப்பது தெரிய வந்தது.


பின்னர் போலீசார் அந்த அறையை திறந்து சோதனையிட்ட போது சுமார் இரண்டு கிலோ எடை கொண்ட 300 பேக்குகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 600 கிலோ கஞ்சாவுடன் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதை கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கண்டெய்னர் மதிப்பு ரூ.1கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.




மத போதகர் கைது:


தொடர்ந்து கண்டெய்னர் லாரி ஓட்டுநர் பாண்டிச்சேரி ஏனம் பகுதியைச் சேர்ந்த சத்தி பாபு மற்றும் கண்டெய்னர் லாரியில் இருந்த தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி சேர்ந்த விஜயகுமார் , தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் மத போதகரான ஜான் அற்புத பாரத் ஆகிய 3பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கண்டைனர் லாரியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.ஆந்திரா மாநிலத்திலிருந்து கண்டெய்னர் மூலமாக கஞ்சா கடத்தி வந்துள்ளனர்.




சிக்கியது எப்படி?


தூத்துக்குடி, வேம்பார், தருவைகுளம் என கடற்கரை பகுதி வழியாக இந்த கஞ்சா இலங்கைக்கு கடந்த திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ‌போலீசார் சோதனை அதிகமாக இருப்பதால் அதிலிருந்து தப்பிக்கும் வகையில் கண்டெய்னர் மேற்பகுதியில் கஞ்சா பொட்டலங்களை வைக்கும் வகையில் சிறிய அறை வடிவில் செட்டப் செய்து அதில் வைத்து கடத்தி வந்துள்ளனர். வெளியே பார்க்கும் போது கண்டெய்னரில் எதுவும் இல்லாத எம்டி கண்டெய்னர் போல் காட்சியளித்துள்ளது.


இருந்த போதிலும் கண்டெய்னர் லாரியின் மேற்பகுதியில் சுற்றி அடிக்கப்பட்டு இருந்த வெள்ளை பெயிண்ட் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்பகுதியை தட்டி பார்த்த போது தான் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.திரைப்படப் பாணியில் கண்டெய்னரில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.