முருகப்பெருமானின் பல ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடந்தாலும், புராண கதைப்படி திருச்செந்தூரே யுத்தம் நிகழ்ந்த தலம். இதனால் ஜெயந்திபுரம் என்றும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது.
கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். அறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி எழுந்தருளல் ஆகியவை நடந்து வருகின்றன. ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவில்களில் சஷ்டி விரதம் இருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சூரசம்ஹாரத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். கோவில் வளாகங்களில் அலைகடலென பக்தர்கள் குவிந்துள்ளனர்கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெறுகிறது.
இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், அதனை தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலையில் யாகசாலை பூஜைகள் முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைவார்.பின்னர் சுவாமி, அம்மன் திருவாவடுதுறை சஷ்டி மண்டபம் வந்து சேருகின்றனர். அங்கு உபதயாதரர் சார்பில் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருள்கிறார். கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹார விழா நடக்கிறது.
அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்மன் சேர்ந்த கிரி பிரகாரம் சுற்றி கோயிலை சேருகின்றனர். அங்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடக்கிறது.சூரசம்ஹார விழா முடிந்ததும விரதமிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்கின்றனர்.
நாளை மறுநாள் 31ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணியளவில் சுவாமி அம்பாள் தோள் மாலை மாற்றும் வைபவமும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறும். கந்த சஷ்டி விழாவையொட்டி பக்தர்கள் வருகை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு நாளைய தினம் சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது