தேங்காய்பட்டணம் துறைமுகம் பகுதியில் உள்ள முகத்துவாரத்தில் மணல் திட்டு காரணமாக அவ்வப்போது படகுகள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனைத் தடுக்க வேண்டி பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கிடையே, துறைமுக முகத்துவாரத்தைச் சீரமைக்க ரூ.116 கோடி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முகத்துவாரம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை அதிகாரிகளுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆய்வு மேற்கொண்டார்.

 



 

அப்போது அவர் கூறியதாவது: கால நிலை ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்படும். அருகில் உள்ள பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்கும் முயற்சியும் விரைவில் துவங்கும். கடந்த ஆட்சியில் மீனவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் பணிகள் செய்ததால் தான் பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை மீனவ மக்களின் ஆலோசனை பெறப்பட்டே பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மீன்வளத்துறை செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், மீனவர் அணி மாவட்ட தலைவர் கென்னடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன், வார்டு உறுப்பினர் கிளிட்டஸ் மற்றும் சுனில், சகாயதாஸ், சவுகத்அலி, சேக், சமீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.