நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்  மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்  புலி, சிறுத்தை, கரடி , யானை, காட்டெருமை,மான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலையை விட்டு  வெளியேறி அடிவார கிராமங்களில் உள்ள கால்நடைகளை வேட்டையாடியும், பொது மக்களை அச்சுறுத்தியும் வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது அனவன்குடியிருப்பு மற்றும் வேம்பையாபுரம் பகுதி.


அடுத்தடுத்து பிடிபட்ட சிறுத்தைகள்:


இந்த பகுதிகளில் சிறுத்தைகள்  நடமாட்டம் இருப்பதாகவும், வீட்டில் கட்டி வைத்துள்ள ஆடு, மாடுகளை கடித்து குதறி மலையடிவாரப்பகுதிக்கு இழுத்து செல்வதாக அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக புகார் தெரிவித்து வந்தனர். பின்னர் வனத்துறையினர் மோப்ப நாய் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து இரண்டு இடங்களில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டதன் பேரில் முதலில் இரு பகுதிகளிலும் தலா ஒரு கூண்டு வைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரண்டு சிறுத்தைகள் பிடிபட்டது. 


அதனை தொடர்ந்து மீண்டும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்ததையடுத்து. அதே இடங்களில் மீண்டும் கூண்டு வைக்கப்பட்டது. அதன்படி மேலும் இரண்டு சிறுத்தைகள் பிடிபட்டது. இதுவரை பிடிபட்ட 4 சிறுத்தைகளையும் வனத்துறையினர் பாதுகாப்பாக மணிமுத்தாறு அருகே அப்பர் கோதையாறு அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இருப்பினும் அப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் 2 சிறுத்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததோடு அச்சத்திலேயே உறைந்திருந்தனர்.




ஆடுகளை தாக்கிய சிறுத்தை:


இந்த நிலையில் தற்போது  மணிமுத்தாறு பகுதியை சேர்ந்த சட்டநாதன் என்பவர் அவர் தனது ஆடுகளை  மணிமுத்தாறு 80 அடி கால்வாய் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.  மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்றை கடித்து இழுத்து சென்றது. இதனை பார்த்தவர்கள் கூச்சலிட உடனே  சிறுத்தை ஆட்டை அப்படியே போட்டு விட்டு வனப்பகுதியில் ஓடி மறைந்தது.  ஆட்டின் அருகில் சென்று பார்த்தபோது அதன் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததோடு  ஆடு காயத்துடன் உயிர் தப்பியது.


பொதுமக்கள் பீதி:


இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து ஆடுகளை தூக்கி வந்து சிறுத்தை தற்போது பகல் நேரத்திலேயே ஆடுகளை தூக்கி செல்வது பொதுமக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஊருக்குள் நுழையும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


கடந்த மாதம் அனவன்குடியிருப்பு, வேம்பையாபுரம் போன்ற மலையடிவார பகுதியில் நான்கு சிறுத்தைகளை வனத்துறை கூண்டு வைத்து பிடித்த நிலையில் தற்போது மேலும் ஒரு சிறுத்தை பகல் நேரத்தில் ஆட்டை கடித்து இழுத்து சென்றது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை  நிரந்தரமாக தடுக்கும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.