நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 4:45 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. 


வெற்றி அறிவிப்பு:


நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நெல்லை மற்றும் ஆலங்குளம் இரண்டு சட்டமன்ற தொகுதிகள் மட்டும் 23 சுற்றுகளை கொண்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தபால் வாக்குகளுடன் சேர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 5,02,296 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் இரண்டாவது இடம் பிடித்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட இவர் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 3 லட்சத்து 36 ஆயிரத்து 676 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 89 ஆயிரத்து 601 வாக்குகளும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யா 87 ஆயிரத்து 686 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் அனைத்து தபால் ஓட்டுக்களும் அடங்கும் என தேர்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற வேட்பாளராக வெற்றி பெற்றுள்ள ராபர்ட் ப்ரூஸ் தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து இருந்து வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்டார்.


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  ராபர்ட் ப்ரூஸ், "எனது வெற்றிக்கு பாடுபட்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவர், அன்னை சோனியா, ராகுல், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் தோழமைக் கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொகுதியில் தங்கியிருந்து மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வேன், தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்" என தெரிவித்தார்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பும், செல்லாத வாக்குகளும்:


இந்த தொகுதியில் 8,08,127 ஆண் வாக்காளர்களும், 8,46,225 பெண் வாக்காளர்களும், 151 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இவர்களில் 5,13,441 ஆண் வாக்காளர்களும், 5,46,963 பெண் வாக்களர்களும், 57 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முதல் சுற்று 3000 தபால் வாக்குகளில் பிஜேபி 600 வாக்குகளும், காங்கிரஸ் 913 வாக்குகளும், 328 வாக்குகள் அதிமுகவிற்கும், 62 வாக்குகள் நாம் தமிழருக்கும் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சிகரமாக 974 தபால் வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல மொத்தமாக முடிவில் செல்லாத வாக்குகளாக 1788 வாக்குகளும், நோட்டா வாக்குகள் 7,396 பதிவாகியுள்ளது. 


உட்கட்சி பூசலும், காங்கிரஸ் வெற்றியும்:


நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸை பொறுத்தவரை உட்கட்சி பூசல் என்பது ஆரம்பம் முதலே இருந்து வந்தது. குறிப்பாக மாவட்ட  தலைவர் நியமனத்தில் ஆரம்பித்த உட்கட்சி பூசல் தொடர்ந்து மோதலாக வெடித்தது. அதன்பின் வேட்பாளர் அறிவிப்பில் பல்வேறு பிரச்சினைகள் வெடித்ததால் வேட்பாளர் அறிவிப்பு என்பது தாமதமானது. உள்ளூர் வேட்பாளர்களான மண்ணின் மைந்தர்களுக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அப்போது பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உட்பட பல முக்கிய விஐபிகள் நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டனர். இந்த சூழலில் தான் கன்னியாகுமரியை சேர்ந்த ராபர்ட் புரூஸ் என்பவரை கட்சி தலைமை அறிவித்தது. அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்து பின் அதனை வாபஸ் வாங்கிய சம்பவமும் நிகழ்ந்தது.  இதனிடையே காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணமும் அரங்கேறியது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பெயருடன் ஜெயக்குமார் எழுதியதாக வெளியான கடிதத்துடன் தற்போது வரை விடை தெரியாத கேள்விகளுடன் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இவ்வாறாக பல்வேறு பிரச்சினைகளுக்கும், உட்கட்சி பூசலுக்கும் நடுவே நெல்லை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு 1.50 லட்சம் வாக்கு வித்தியாசத்திற்கு மேல் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.