தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியார்புரத்தில் போராட்டம் துவங்கியது. போராட்டத்தின் நூறாவது நாளான 2018ஆம் ஆண்டு மே மாதம் 22 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கலவரத்தில்  போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர்.

 


 

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் 34 ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் 9 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஒருநபர் ஆணையத்தின் 34வது அமர்வு இன்றுடன் நிறைவு பெற்றது.



 

இதுதொடர்பாக ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒருநபர் ஆணையத்தில் இதுவரை நடந்த 34 கட்ட விசாரணையில் 1,417 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,037 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட 9 உயர் அதிகாரிகளில் 6 பேர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதில் ஒரு ஐ.ஏ.எஸ்., ஒரு போலீஸ் கமிஷனர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் அடங்குவர்‌. ஒருநபர் ஆணையத்தின் 35-வது அமர்வு விசாரணை வருகிற ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறும். இதில், சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாதவர்கள் ஆணையத்தின் முன்பு விளக்கமளிப்பார்கள். மேலும், துப்பாக்கி சூட்டின் போது பணியிலிருந்த காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், தென்மண்டல ஐ.ஜி., டி.ஐ.ஜி. உள்பட முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட உள்ளனர்.



 

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் முதல்வரை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்தவர்கள், தேவையென்றால் மட்டும் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அரசு கொடுத்த காலக்கெடுவுக்குள் ஆணையத்தின் விசாரணையை முடிப்பதற்கு அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இனிவரும் சாட்சியங்கள் அனைத்தும் முக்கியமானவை என்பதால் விசாரணை நீண்ட நேரம் நடக்கும். தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரிடம் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் சாட்சியங்களில் ஒருவரை தீர விசாரிப்பதற்கு ஒரு நாள் கூட தேவைப்படலாம் என்றார்.