நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடை மதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் நேற்றிரவு கற்களை ஏற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இரவு சுமார் 12 மணி அளவில் திடீரென மிகப்பெரிய பாறை உருண்டு பள்ளத்துக்குள் கல் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் 2 லாாிகள், 3 கிட்டாச்சி உள்ளே மாட்டிக் கொண்டன. லாரி டிரைவர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன்,  விஜய் பாறைக்குள் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர், தகவல் அறிந்து நாங்குநேரி பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மீட்பு பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனும் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.




ஆனால் இரவு நேரம் என்பதினாலும் சம்பவ இடத்தில் வெளிச்சம் இல்லாமல் கடும் இருட்டாக இருந்ததாலும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மேலும் மழை பெய்து வருவதாலும், சுமார் 300 அடி பள்ளம் என்பதினாலும் மீட்பு பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டது.  இதனால் காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் ராட்சத கிரைன் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு அதன் பின் தான் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்படும் என கூறப்பட்டது, மேலும் காலை வரை போராடியும் 6 பேரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது,  மேலும் அவ்வப்போது பாறைகளில் மண் சரிவும் ஏற்படுவதால் மேலும் சிக்கல் ஏற்பட்டது,




இந்த சூழலில் தற்போது காலை 7 மணி அளவில் கல்குவாரியில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர் கயிறு மூலம் மீட்க குழிக்குள் இறங்கினார், 300 அடி ஆழத்தில் 2 காயம்பட்ட நபர்களின் அருகில் சென்ற தீயணைப்பு வீரர் முருகன் என்ற நபரை கயிறு மூலம் மீட்டார், தற்போது விஜய் என்பவரை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டு உள்ளனர், மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது, மேலும் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்க இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தற்போது மீட்பு பணியில்  ஈடுபட்டு உள்ளது,




 







 




மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இந்த குவாரி முறையான அனுமதி பெற்று செயல்படுகிறதா? குறிப்பிட்ட அளவை தாண்டி தோண்டப்பட்டு கற்களை எடுத்து வருகின்றனரா? முறையான பாதுகாப்போடு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் தொடர் விசாரணையும், மீட்பு பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது, இச்சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,