தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளஞ்சிறார் உட்பட 2 பேர், சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டனர்




தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி, குமரன் நகர் பகுதியை சேர்ந்த போஸ்கோ ராஜா மனைவி சகாய சித்ரா (52) என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இரவு தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சகாய சித்ராவின் கழுத்தில் இருந்த 7 ¼ பவுன் தங்க தாலி செயினை பறித்து விட்டு சென்றுள்ளனர். இதனால் நிலை தடுமாறிய தாய்-மகள் இருவரும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். இதில் காயமடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது குறித்து சகாய சித்ரா அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.




இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தங்க நகையை மீட்குமாறு உத்தரவிட்டு இருந்தனர்.அதன்பேரில் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர காவல் உதவி கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களின் பதிவின் அடிப்படையில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் பின்லேடன் (20) மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 17 வயதுடைய இளஞ்சிறார்  ஒருவர் ஆகிய 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று சகாய சித்ராவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. 




உடனடியாக தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுப்பட்ட பின்லேடன் மற்றும் இளஞ்சிறார் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 2,25,000/- மதிப்புள்ள 7¼ பவுன் தங்க செயினையும், செயின் பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட TN 69 BQ 0644 என்ற இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வழிப்பறியில் ஈடுப்பட்ட பின்லேடன் மீது ஏற்கனவே மத்தியபாகம் மற்றும் தாளமுத்துநகர் ஆகிய காவல் நிலையங்களில் 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.சம்பவம் நடைபெற்ற 24 மணிநேரத்தில் எதிரிகளை கைது செய்து தங்க நகையை மீட்ட  வடபாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.