தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரையில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன் முதல்கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் 90 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் சி சைட் என அழைக்கப்படும் அலெக்சாண்டர் ரியா கடந்த 100 வருடங்களுக்கு முன்பு அகழாய்வு செய்த பகுதியில் 30 செ.மீ., ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் 1902 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்தபோது தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் நடந்த 4 கட்ட அகழாய்வு பணியில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது சுமார் 3 மீட்டர் ஆழத்தில் அகழாய்வு குழி தோண்டப்பட்டது. அந்த குழியில் 160 செண்டி மீட்டர் நீளமுள்ள நீளமான ஈட்டி போன்ற ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே இரும்பு பாத்திரம் கண்டிபிடிக்கப்பட்டு உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இரும்பு பாத்திரத்தின் மீது நெல் உமியின் படிமங்கள் ஒட்டிய நிலையில் காணப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலில் ஆதிச்சநல்லூரில் தான் இந்த இரும்பு பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அகழாய்வு பணிகள் நடந்து வரும் இடத்தை பார்வையிட வந்தார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ், தொல்லியல் ஆய்வாளர் எத்திஸ்குமார் ஆகியோர் விளக்கமளித்தனர். அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களையும், முதுமக்கள் தாழிகளையும் அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து அகழாய்வு பணியில் 3 மீட்டர் ஆழமான குழியில் இறங்கி மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அந்த குழியில் 160 செ.மீ., நீளம் கொண்ட இரும்பால் செய்யப்பட்ட ஆயுதத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து அகழாய்வு அதிகாரிகள் தங்கி இருக்கும் இடத்தினை பார்வையிட்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவதாக கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்