தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மணல் குவாரிகள் அமைக்க நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இதனால் கட்டுமான பணிகளுக்கான மணல் இல்லாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55 ஆயிரத்து 445 டன் மணலை கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. இதற்காக அந்த நிறுவனம் 7 கோடியே 75 லட்சத்து 54 ஆயிரத்து 813 மதிப்புள்ள மணலுக்கு, 2.88 கோடி சுங்கவரி, 38.40 லட்சம் ஜி.எஸ்.டி. வரியுயும் செலுத்தி இருந்தது. தொடர்ந்து இந்த மணலை கட்டுமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது.

 

 



 

ஆனால், தமிழக அரசு சார்பில் தனியார் நேரடியாக மணல் விற்பனை செய்ய தடை விதித்தது. அது மட்டுமின்றி மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்று அரசாணையை வெளியிட்டது. இதனை எதிர்த்து மணல் இறக்குமதி செய்த தனியார் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு அந்த மணலுக்காக 12 கோடியை தனியார் நிறுவனத்துக்கு கோர்ட்டு மூலம் வழங்கியது. இதனை தொடர்ந்து அரசே மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

 


 

அதன்படி தமிழக அரசு, தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனைக்கான முன்பதிவு 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி மாலை 4 மணி முதல் தொடங்கப்பட்டது. இந்த மணலுக்காக, TNsand இணையதளத்திலும், செல்போன் செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். துறைமுகத்தில் முதல்கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மட்டுமே வழங்கப்பட உள்ளது. முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து மணல் வழங்கப்படும். TNsand இணையதளத்தில் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி ஒரு யூனிட் (சுமார் 4.5 டன்) மணல் விலை 9,990 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், 2 யூனிட் மணலின் விலை 19,980 ரூபாயாகவும், 3 யூனிட் மணலின் விலை 29,970 ரூபாயாகவும் 4 யூனிட் மணலின் விலை 39,960 ரூபாயாகவும் 5 யூனிட் மணலின் விலை 49,950 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

 



 

 

மலேசிய மணலுக்கு மவுசு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பலர் இந்த மணலை வாங்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. மணலுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எம்.சாண்ட் விற்பனையும் அதிகரிக்கப்பட்டது. அரசு கட்டிடங்கள் பெரும்பாலும் எம்.சாண்ட் கொண்டு கட்டப்பட்டன. இதனால் இறக்குமதி செய்யப்பட்ட மலேசியா மணலின் மீது இருந்த பில்டர்ஸ் பார்வை எம்.சாண்ட் பக்கம் திரும்பியது. இதனால் மலேசியா மணல் பாராமுகமாகி விட்டது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே  மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ள மணல் விற்பனையாகாமல் தேங்கி உள்ளது. செடி, கொடிகளால் சூழப்பட்டு கிடக்கிறது.
  

 

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மணல் வைக்கப்பட்டதால் அதற்கு அரசு சார்பில் 70 லட்சம் துறைமுகத்துக்கு வாடகை கட்டணம் தர வேண்டியுள்ளது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியின் தவறான முடிவால் மணல் விற்பனை ஆகாத நிலையிலும், வாடகை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதால் அரசுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. புதிய அரசு மலேசிய மணலை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர்.