தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் வந்தியதேவன்(வயது 64). இவர் தனது நிலத்துக்கு உரிய பத்திரம் தொலைந்து விட்டதால் அதற்கான நகல் பெற முயற்சி செய்தாராம். இதனால் தனது நண்பரான புதியம்புத்தூரை சேர்ந்த பொன்ராஜ்(66) என்பவரிடம் தெரிவித்தாராம். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு பொன்ராஜ் தனது நண்பர்களாக புஷ்பாநகரை சேர்ந்த அசோகர்(65), மறவன்மடத்தை சேர்ந்த கிறிஸ்டோபர்(56), சிலுவைப்பட்டியை சேர்ந்த இம்மானுவேல்(59), ரகுமத்துல்லாபுரத்தை சேர்ந்த காளீசுவரன்(61) ஆகிய 5 பேருடன் சேர்ந்து ஒரு போலீஸ் மனு ஏற்பு ரசீது கொடுத்து உள்ளார்.




போலி போலீஸ் மனு:


அந்த மனு ரசீதை பெற்றுக் கொண்ட வந்தியத்தேவன், அதனை உண்மை என்று நம்பி, தென்பாகம் போலீஸ் நிலையத்தில் கொடுத்து ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான போலீஸ் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்து உள்ளார். அப்போது மனு ரசீதை தென்பாகம் போலீசார் ஆய்வு செய்து உள்ளனர். அது போலியான ரசீது என்பது தெரியவந்து உள்ளது. இதனை அறிந்த வந்தியத்தேவன் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து கொடுத்து இருப்பது தெரியவந்தது.




உடனடியாக போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்ராஜ், அசோகர், கிறிஸ்டோபர், இம்மானுவேல், காளீசுவரன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.




போலி ஆவணங்கள்:


மேலும் போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீஸ் நிலையங்களில் சீல்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மாநகராட்சி ஆணையாளர், தாசில்தார்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளின் ரப்பர் ஸ்டாம்பு முத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்த பல்வேறு போலிச் சான்றிதழ்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்தனர்.


இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி பகுதியில் இன்டர்நெட் சென்டர் நடத்தி வரும் மேலும் 2 பேருக்கும் இதில் தொடர்புள்ளது  தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான பெருமாள், மகாராஜன் மற்றும் இன்டர்நெட் சென்டர் நடத்தி வரும் 2 பேர் என 4பேரை போலீசார் தேடிவருகின்றனர். பல்வேறு போலிச் சான்றிதழ்கள் மற்றும்  போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்த தென்பாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.