ராமநாதபுரம் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு 46 கொலைகள், 2020ஆம் ஆண்டு 41 கொலைகள் நடந்துள்ளன. இதில் 2020ஆம் ஆண்டில் கள்ளத்தொடர்பு பிரச்னைகள் காரணமாக 9 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் 2021ஆம் ஆண்டு 51 கொலைகள் நடந்துள்ளன. இதில் 23 கொலைகள் கள்ளக்காதல், காதல் விவகாரத்தில் நடந்துள்ளன. சிறு சண்டைகள், போதையில் 19 கொலைகளும், சொத்து பிரச்னையில் 4, பணப்பிரச்னையில் 3 கொலைகளும் நடந்துள்ளன. மற்ற பிரச்னைகளில் இரு கொலைகள் நடந்துள்ளன. இவை தவிர, 2021ஆம் ஆண்டு நகை, பணத்திற்காக 5 ஆதாய கொலைகள் நடந்துள்ளன. இதில் மண்டபத்தில் சமீபத்தில் நடந்த தாய், மகள் கொலையும் அடங்கும். மேலும் 9 கூட்டு கொள்ளை, 53 வழிப்பறி, 3 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் 90 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு 88 சதவீத குற்றங்களும், இந்த ஆண்டு 90 சதவீத குற்றங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கடந்த ஆண்டு 59 சதவீத பொருட்களும், இந்த ஆண்டு 48 சதவீத பொருட்களும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டு 46 லட்சத்து 26 ஆயிரத்து 344 மதிப்பிலான பொருட்கள் திருடுபோனதில் ரூ.27 லட்சத்து 11 ஆயிரத்து 935 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த ஆண்டு ரூ.27 லட்சத்து 35 ஆயிரத்து 10 மதிப்பிலான பொருட்கள் திருடு போனதில் ரூ.13 லட்சத்து 9 ஆயிரத்து 185 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. பாலியல் கொடுமைகளை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன்படி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 93 வழக்குகளும், இந்த ஆண்டு இதுவரை 104 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து எஸ்.பி., கார்த்திக் கூறுகையில், மாவட்டத்தில் 2021ல் கொலைகள் அதிகரித்துள்ளன. இதில் அதிகளவில் நடத்தை விவகாரத்திலும், கள்ளக்காதல் தொடர்பான பிரச்னைகளில் மட்டும் 23 கொலைகள் நடந்துள்ளன. தவறான சமூக வலைதளங்களால் ஏற்பட்டுள்ள தாக்கமே இதற்கு காரணம்.மக்களிடையே ஒழுக்க சீர்கேடு அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. இதுபோன்ற நடத்தை சீர்கேடுகளை பெற்றோர், குடும்பத்தில் பெரியவர்கள் புரிய வைக்க வேண்டும், என தெரிவித்தார்.
மேலும் அவர், மாவட்டத்தில் கடந்த ஆண்டு 292 விபத்துகளில் 305 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 299 விபத்துகளில் 307 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு 730 விபத்துகளில் 776 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 793 விபத்துகளில் ஆயிரத்து 43 பேர் காயமடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக 7 லட்சத்து 95 ஆயிரத்து 753 வழக்குகளும், இந்த ஆண்டு இதுவரை 9 லட்சத்து 26 ஆயிரத்து 916 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு கேடு விளைவித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததாக கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் தலா 19 பேரும், இந்த ஆண்டு இதுவரை 106 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டுகளைவிட 5 மடங்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு பொது அமைதிக்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது., என அவர் கூறினார்.