நாகர்கோவில்: கல்யாணம் பண்ணி வையுங்க... குடிபோதையில் டார்ச்சர் செய்த மகனால் பெற்றோர் தற்கொலை!
கூலித்தொழில் செய்யும் 2 வது மகன் இயேசு ஜெபின் அடிக்கடி மது போதையில், தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தாய் தந்தையை துன்புறுத்தியும் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியும் வந்துள்ளார்
Continues below advertisement

தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, மது போதையில் மகனின் தொந்தரவால் தாய் தந்தை இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன் புதூர், சீயோன்நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வ ஜெயசிங்(68). அவரது மனைவி தங்கம்(65). இவர்களுக்கு சதீஷ், இயேசு ஜெபின் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் சதீஷ் திருமணமாகி அருகாமையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இயேசு ஜெபின்(32) திருமணம் ஆகாத நிலையில் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தந்தை செல்வ ஜெயசிங் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கூலித்தொழில் செய்யும் 2 வது மகன் இயேசு ஜெபின் அடிக்கடி மது போதையில், தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தாய் தந்தையை துன்புறுத்தியும் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியும் வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து நேற்றும் இதேபோல் தகராறில் ஈடுபட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வ ஜெயசிங் மற்றும் தங்கம் தன்னுடைய மூத்த மகனான சதீஷ்க்கு தொலைபேசியில், இருவரும் இதற்கு மேல் உயிருடன் இருக்க விரும்பவில்லை என தகவல் கூறிவிட்டு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும் , துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவர்களை தற்காலிகம் ஆக்குவதும் நிரந்தரம் ஆக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலும் தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் 104, சிநேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.