தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வேட்புமனு பரிசீலனை கடந்த 5ம் தேதி நடைபெற்றது.. 7ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறப்பட்டது. இதில் பலர் தங்களது வேட்புமனுக்களை இறுதி நேரத்தில் வாபஸ் பெற்றுக்கொண்ட சுவாரஸ்ய சம்பவங்களும் நடைபெற்றது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க உள்ள உள்ள நிலையில் நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது.  இந்த வார்டுகளில் போட்டியிட மொத்தமாக 540 பேர் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். அதில் 71 வேட்புமனுக்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தள்ளுபடி செய்யப்பட்டது, மீதமுள்ள 469 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் 61 பேர் தங்களது வேட்புமனுக்களை  வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதனால் தற்போது நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் உள்ள பதவிகளுக்கு மொத்தம் 408 பேர் களம் கான தயாராகி வருகின்றனர். அதற்கான தீவிர பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். 




அதே போல நெல்லை மாவட்டத்தில் களக்காடு, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் என மொத்தம் 3 நகராட்சிகள் உள்ளது. அதில் களக்காடு நகராட்சியில் மொத்தம் 144 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்த நிலையில் எந்த மனுக்களும் நிராகரிப்பு செய்யப்படாததால் 144 மனுக்களும் ஏற்கப்பட்டது, இதில் 15 பேர் தங்களது மனுக்களை வாபஸ் வாங்கிய நிலையில் 129 பேர் தேர்தலில் களம் கான உள்ளனர். 


அம்பாசமுத்திரம் நகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 21 பதவிகளுக்கு 89பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 5 பேரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் 84 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. தொடர்ந்து 15 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில் தற்போது 69 பேர் களத்தில் உள்ளனர். 



விக்கிரமசிங்கபுரம் நகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 21 இடங்களுக்கு 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் ஒருவரது வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டதால் மீதமுள்ள 95 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டது. தொடர்ந்து 11 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் வாங்கிய நிலையில் தற்போது 84 பேர் தேர்தலில் களம்  கான தயாராக உள்ளனர். 17 பேரூராட்களை பொறுத்தவரை மொத்தமுள்ள 273 வார்டுகளுக்கு 1357 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 23 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 1334 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. அதில் 225 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்ட நிலையில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மொத்தமுள்ள 264 பதவிகளுக்கு 1100 பேர் போட்டியிட தயாராக உள்ளனர். 




ஒட்டுமொத்தமாக நெல்லை மாவட்டத்தில் 2226 பேரின் வேட்புமனுக்களில் 100 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டும், 327 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டும், 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டும் மொத்தம் 1790 பேர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.