நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் நிறுவனத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னையில் மழைக்கால வடிகால் பணிகள் சிறந்த முறையில் தமிழக அரசால் சென்னை மாநகரில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேர இடைவெளியில் பெய்த கனமழையின் காரணமாகவே தண்ணீர் தேங்கியது. கடந்த காலங்களில் சென்னை பகுதியில் மழைநீர் தேங்கிய அளவை விட தற்போது குறைந்த அளவே மழை நீர் இருந்து வருகிறது. சென்னை வாசியாக இதனை நான் உணர்ந்து பேசுகிறேன். தற்போது ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளையும் முதல்வர் கவனத்திற்கு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு தகவல்களை தெரிவித்துள்ளனர். அதனையும் வருங்காலங்களில் உரிய ஆய்வு நடத்தி தமிழக முதலமைச்சர் நடவடிக்கையின் மூலம் சரி செய்வார்.


நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலங்களிலும், காங்கிரஸ் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் தெலுங்கானாவில் பெற்ற வெற்றி மிகப் பெரியதாக நாங்கள் பார்க்கிறோம். வட இந்தியர்களை விட தென் இந்தியர்கள் மிகவும் தெளிவாக வாக்களித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி பெற்ற இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எந்த விதத்திலும் பிரதிபலிக்காது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். வரும் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் வித்தியாசமாக அமையும். வடமாநிலங்களில் மதவாத அரசியல் மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியா கூட்டணி மதவாத பாஜக அரசை அகற்ற வேண்டும் என்ற முயற்சிலேயே ஆரம்பிக்கப்பட்டு இரண்டு கூட்டங்கள் நடைபெற்று உள்ளது. யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதில் இந்தியா கூட்டணி மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் மிகுந்த ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். எங்கள் கூட்டணியுடைய ஒற்றுமை வெளிப்பாடு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியாக பிரதிபலிக்கும்.


ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு மத்திய அரசின் மூலம் கடந்த சில மாதங்களாக செய்த பல கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளே காரணமாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் இருந்த ஆளுநர்கள் நடுநிலையோடு இருந்தார்கள். தற்போது உள்ள ஆளுநர்கள் எல்லாம் சங்க பரிவார் அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வருகிறார்கள். மத, ஜாதி அரசியல் பேசுபவர்களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும். அப்படி அவர்கள் புறக்கணித்தால் மட்டுமே ஜாதிய, மத படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தெலுங்கானாவில் ஆறு சதவீதம் இருந்த பாஜக வாக்கு வங்கி 16 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடுத்த தேர்தலில் இதுவும் இருக்காது. தென் மாநில மக்கள் கல்வி அறிவில் சிறந்தவர்கள் என தெரிவித்தார்.