கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது. காலையில் பெய்த மழையின் காரணமாக பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை கோட்டார் சாலை மீனாட்சிபுரம் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். மார்த்தாண்டம் தக்கலை குலசேகரம் இரணியல் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.

 



 

கொட்டாரம் மயிலாடி ஆரல்வாய்மொழி சுசீந்திரம் பகுதிகளில் இருந்து காலை முதலே மழை பெய்து கொண்டே இருந்தது. களியல் பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 52.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்துவரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதையடுத்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

 

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 37.98 அடியாக இருந்தது. அணைக்கு 382 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 534 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது‌. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.35 அடியை எட்டியது. அணைக்கு 238 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 175 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1-அணை நீர்மட்டம் 11. 22 அடியாகவும் சிற்றார்-2-அணை நீர்மட்டம்11.31 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்தமழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு பேச்சிப்பாறை 45.4 பெருஞ்சாணி 45.4, சிற்றார்-1-12.6 சிற்றார்-2-28.4 பூதப்பாண்டி 10.2, களியல் 52.4, கன்னிமார் 3.2, குழித்துறை 31, மயிலாடி3.2, நாகர்கோவில் 2, தக்கலை 25, சுருளோடு 29.2, பாலமோர்-21.4, திற்பரப்பு 39.8, அடையாமடை 19.2, குருந்தன்கோடு 2.2, முள்ளங்கினாவிளை-25.6, ஆணை கிடங்கு 28 . தொடர் மழையின் காரணமாக செண்பக ராமன் புதூர் தோவாளை பகுதிகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.