அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை பணியாளர்கள் பணிக்கு வரும் பொழுது தங்கள் வருகையை புதிய செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் முறை என்பது ஏட்டில் பதிவு செய்யப்பட்டு பின் கல்வியியல் மேலாண்மை தகவல் மைய இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு வந்தது, இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் அதற்கு முன்பு வெறும் ஏட்டில் மட்டும் பதிவு செய்யப்பட்டது.  இந்த முறைகளில் இருக்கும் காகித பயன்பாட்டை முற்றிலும் குறைத்து டிஜிட்டல் நுட்பத்திற்கு மாறும் வகையில் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


அதன்படி பள்ளிக் கல்விஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் பள்ளிகளில் கற்றல் திறன் சிறப்பாக இருக்க தலைமை ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு வகுப்பிற்கு சென்று பாடம் கற்பிக்க வேண்டும், கல்வி அலுவலர்கள் மற்றும் ஆட்சியர்கள் உத்தரவின்றி பள்ளிக்கு விடுமுறை அளிக்க கூடாது. அதே போல (ஆகஸ்ட் 1 ) இன்று முதல் மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் வருகையை பதிவேட்டில் பதிவு செய்ய  வேண்டாம். மாறாக வருகை பதிவினை செயலியில் மட்டும் பதிவிட வேண்டும். அதே போல ஆசிரியர்கள்  தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்க டி என் எஸ் இ டி என்ற பள்ளி செயலியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.




அதே போல பள்ளிகளில் முக்கியமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  மாணவர்களின் வருகையை வகுப்பு வாரியாக இ எம் ஐ எஸ் இல் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை சுற்றறிக்கையாக கல்வித்துறை ஆணையர் அனுப்பியிருந்தார். இந்த வருகை பதிவேட்டு முறையை டிஜிட்டல் மையமாக மாற்றும் பணி தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் கடந்த ஆறு மாதங்களாக செயல் முறையில் முன்னோட்டமாக நடைபெற்றது.




 


அதன்படி இன்று முதல் இந்த புதிய முறைகள் நடைமுறைக்கு வந்தது.  காலையில் மாணவர்கள் பள்ளி வந்ததும் அவர்களது வருகையை செயலியில் ஆசிரியர்கள் பதிவு செய்தனர். அவ்வாறு செயலியில் பதிவு செய்யும்போது லொகேஷன் இருப்பிட ஆதாரம் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதால் இதில் ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து கொண்டு மட்டுமே செயலியை பதிவு செய்ய முடியும். மேலும் பள்ளியிலிருந்து வேறு எங்கேயும் சென்றால் அதனை முழுமையாக இருப்பிட விவரம் அறியும் செயலி மூலம் கண்டறிய முடியும் என்பதால் வரவேற்கத்தக்க ஒரு விஷயமாக ஆசிரியர்கள் தரப்பில் பார்க்கப்படுகிறது. இருந்தும் கடந்த ஆறு மாத காலங்களில் பயன்பாட்டில் இருந்த போதும் சர்வர் பிசி என அடிக்கடி பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருந்தது. எனவே இந்த செயலியின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கையும் எழுந்துள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 1536 பள்ளிகளில் இன்று முதல் Emis செயலியை செயல்படுத்துகின்றனர் என முதன்மை கல்வி அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண