தமிழகத்தில் போதை பொருட்கள் கடத்தலில் திமுகவை சேர்ந்தவர்கள் பெரியஅளவில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டும் நிலையில் திமுகவினர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தென்காசி மாவட்டம் சிவகிரி வாகன சோதனை சாவடியில் சிறப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சோதனை சாவடி வழியாக வந்த சொகுசு காரை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். அந்த காரில் 440 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார் டிரைவரும் காரில் இருந்தவரும் அதுகுறித்து சரியான பதில் அளிக்காததால் போலீசார் அவர்களை கீழே இறக்கி விசாரணை செய்தனர். விசாரணையில் குட்கா கடத்தலில் ஈடுபட்டது திமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்ச்செல்வியின் கணவர் போஸ் என்பது தெரியவந்தது. மேலும் வெளிமாநிலங்களிலிருந்து காரில் கடத்தி வரப்பட்டதும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்ச்செல்வியின் கணவர் போஸ் மற்றும் ஓட்டுநர் லாசர் ஆகிய இருவரையும் கைது செய்து சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் என்ற பெயரில் இவர் பல்வேறு கடத்தல் வழக்குகளை ஈடுபட்டு வருவதும், குட்கா உள்ளிட்ட போதை பொருள் கடத்தலில்  இவர் மீது திருப்பூர், விழுப்புரம், கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் குற்ற வழக்குகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. 




இந்த நிலையில் திமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகரின் கணவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவரான சுபாஷ் சந்திரபோஷ் கட்சியின் அடிப்படை பதவிகள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கழகக்கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக்க நீக்கி வைக்கப்படுகிறார் என்றும் இவரோடு கழகத்தினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாக்கூடாது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குறிப்பாக, சமீப காலமாக போதை பொருள் நடமாட்டத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது திமுகவினர் தான் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது தென்காசி மாவட்டத்தில் முக்கிய நிர்வாக பொறுப்பில் உள்ள திமுகவை சேர்ந்த தமிழ்ச்செல்வி போஷின் கணவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.