திருநெல்வேலி மாவட்டத்தில் நிறைய நீர்நிலைகள் உள்ளன. குளித்து ரசித்து மகிழ ஏராளமான இடங்கள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் விட மிக சிறப்பாக குளிர் பிரதேசம் போல காட்சியளிக்க கூடியதும் இனிமையான தட்பவெப்ப நிலைகளும் அமைதியான சூழல் மற்றும் இயற்கை காட்சிகள் நிறைந்ததுமான இடம் ஒன்று உள்ளது. அது என்ன தெரியுமா? அதுதான் மாஞ்சோலை.




அழகிய புல்வெளி படலம்:


களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருக்குள் இந்த மலைவாஸ்தளம் அமைந்திருக்கிறது. திருநெல்வேலி நகரத்திலிருந்து 57 கிலோ மீட்டர் தொலைவில்  கடல் மட்டத்திலிருந்து 1162 சதுர மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அழகிய மாஞ்சோலை. வழி எங்கிலும் மலை வளைவுகளும் போக போக குளிர்ச்சியான சூழலும் நிலவக்கூடிய இடம் தான் மாஞ்சோலை. மலையை சுற்றிலும் ஆங்காங்கே பறந்து விரிந்த தேயிலை தோட்டங்கள் கண்ணுக்கு இனிமையான விருந்து ஆகிறது. ஊட்டிக்கு அடுத்தபடியாக தேயிலை தோட்டங்களின் தாயகமாக மாஞ்சோலை விளங்குகிறது.  பச்சை பசேலென்ற புல் விரிப்பு பகுதி தான் காக்காச்சி புல் வெளி படலம். நம் பாதத்தை அந்த புல்வெளியில் பதிந்தால் அதன் குளுமை நம் இதயம் வரை குளிரும்.  அதில் பறந்து ஓடி விளையாடும் கொக்கு போன்ற பறவைகள் பார்க்க மிக அழகான ஓவியம் போலக் காட்சி தரும்.




புகைப்படங்கள் எடுக்க அழகிய பசுமையான ஸ்பாட் இந்த மாஞ்சோலை. மணிமுத்தாறு செக் போஸ்ட் வழியாக அனுமதி பெற்றே செல்ல முடியும். அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, குதிரை வெட்டி, கோதையார் அணை போன்ற இடங்கள் நம் கண்களுக்கு விருந்து அளித்து நம்மை வரவேற்கும். வருடத்தில் ஜனவரி, பிப்ரவரி, நவம்பர், டிசம்பர், மாதங்களில் சூரிய உதயத்திற்கு பின் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் பார்வையிட அழகிய இடம் இந்த மாஞ்சோலை.


 மாஞ்சோலையில் சாப்பிட இடம்:


மாஞ்சோலை சென்றதும் அங்கே முதலில்  வகை வகையான டீ குடிக்க கிடைக்கும். பின்பு டீ ரஸ்க் மாஞ்சோலையில் பேமஸ். மதிய உணவுக்கு முன்பே மாஞ்சோலையில் உணவு தயாரிப்பு ஆட்களிடம் ஆர்டர் கொடுத்தால் சைவம் அசைவம் இரண்டுமே சமைத்து தருவார்கள் ‌.இல்லையென்றால் கையில் சாப்பிட சாப்பாடு எடுத்து செல்வது சிறப்பு.




எப்படி செல்வது : 


திருநெல்வேலியில் இருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக அம்பாசமுத்திரம் வந்து அங்கு தனியார் கார் அல்லது வேன் ஏற்பாடு செய்து வனத்துறையிடம் எழுத்து பூர்வமாக அனுமதி பெற வேண்டும். அதே போல திருநெல்வேலியிலிருந்தும், அம்பாசமுத்திரத்தில் இருந்தும் மாஞ்சோலை மலைப்பகுதிக்கு சென்று வர குறிப்பிட்ட நேரத்தில் அரசு பேருந்தும் இயக்கப்படுகிறது. மாஞ்சோலை செல்லும் வழியில் மணிமுத்தாறு அணை மற்றும் அருவி உள்ளது அதனை கண்டு களித்தபடி மகிழ்ச்சியாக செல்லாம்.. நெருக்கடியான சூழலில் வாழ்ந்த மக்களுக்கு மாஞ்சோலை உடலுக்கும் மனதிற்கும் ஒரு வித புத்துணர்ச்சியை அளிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தில்லை. அதேநேரம் களக்காடு-முண்டந்துறை சரணாலயத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த மாஞ்சோலையில் யானை, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சாம்பார் மான் உள்ளிட்ட வன விலங்குகளும்  வாழ்கின்றன. அவற்றையும் சில நேரங்களில் கண்டு ரசிக்க வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் மாஞ்சோலை டிரிப் ஒரு புதுவித அனுபவத்தை தருவதோடு இந்த கோடைக்கு சென்று வர சிறந்த சுற்றுலா தளமாக பார்க்கப்படுகிறது.