நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறை இணை பேராசிரியர் ரமேஷ் ( 51 ) என்பவரும் அதே துறையில் உதவி பேராசிரியர் ஜெனிதா ( 43 ) என்பவரும் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலையில் பல்கலைகழகம் முடிந்ததும் பேராசிரியர் ஜெனிதாவின் காரில் பேராசிரியர் ரமேஷ் உடன் சென்றுள்ளார். அப்போது நாகர்கோவில் சாலையில் டக்கரம்மாள்புரம் பகுதியில் ஜெனிதா வீட்டு முன்பாக காரில் இருந்து இறங்கிய போது ஏற்கனவே அங்கு டூவீலரில் வந்து காத்திருந்த மர்ம நபர்கள் மூன்று பேர் பேராசிரியர் ஜெனிதாவை தாக்கி உள்ளனர். தடுப்பதற்காக காரில் இருந்து இறங்கிய ரமேஷையும் அந்த கும்பல் தாக்கி உள்ளனர். கத்தியின் பின்புறத்தால் ரமேஷ் கழுத்திலும், முதுகிலும் குத்தியுள்ளனர்.


இருவரையும் கொலை செய்ய ஒரு தரப்பினர் பணம் தந்ததாகவும், நீங்கள் பணம் தந்தால் உங்களை விட்டு விடுகிறோம் எனக் கூறி பணம் கேட்டு உள்ளதாகவும், ஜெனிதா பணம் இல்லை என கூறி வளையல்களை கழற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கும்பல் அவரிடமிருந்து ஏடிஎம் அட்டையையும் வாங்கி பின் நம்பரையும் குறித்துக் கொண்டுள்ளனர். பேராசிரியர் ரமேஷை கீழே தள்ளி தாக்கியதோடு அவரது மொபைல் போனையும் ஏடிஎம் அட்டையையும் பறித்துக் கொண்டுள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பேராசிரியர் ரமேஷ், மெயின் ரோட்டில் ரோந்து சென்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளார். போலீசார் அவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். பேராசிரியர் ஜெனிதா புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பிச்சென்ற 3 பேரும் ஜெனிதா ஏ.டி.எம், கார்டை பயன்படுத்தி ரூ 5 ஆயிரம் வீதம் ரூ 15 ஆயிரம் வீதம் எடுத்துள்ளனர். ரமேஷ், ஏடிஎம் அட்டையின் பின் நம்பரை வேண்டுமென்றே மாற்றிக் கூறியதால் பணம் தப்பியுள்ளது.




திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரமேஷ் கூறுகையில், ”எங்களை கொலை செய்யும் நோக்கோடு வந்த 3 பேரும் திருநெல்வேலியை சேர்ந்த கூலிப்படையினர் தான்.  இருவர் பல்சர் டூவீலர்களில் வந்திருந்தனர். ஒருவருக்கு 60 வயதும், மற்றவருக்கு 47, 35 வயது இருக்கும். எங்களுக்கிடையே தகராறு நடந்த போது நான் ஒரு கட்டையை எடுத்து அவர்களில் ஒருவனை தலையில் அடித்தேன். இதில் அவனுக்கு ரத்தம் வந்தது. ஜாதியை கூறி என்னையே அடித்து விட்டாயா என என்னை கத்தியால் குத்த வந்தான். அதில் எனக்கு காயம் ஏற்பட்டது. பிறகு மூவரும் எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் பேசினர். திருநெல்வேலி பல்கலையில் நடந்த முந்தைய மோசடி குறித்த வழக்கில் நான் சாட்சியாக உள்ளேன். எனவே என்னை மிரட்டுவதற்கு யாராவது கூலியாட்களை அனுப்பி இருக்கலாம்” எனக் கூறினார்.