தூத்துக்குடி-நெல்லை இடையே சாலை போக்குவரத்து முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. ரெயிலில் போகலாம் என்றால் ஒன்றரை மணி நேரம் ஆகும் என்பதால் தூத்துக்குடி டூ நெல்லை செல்லும் பயணிகள் பேருந்துகளையே நாடுகின்றனர்மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அவ்வப்போது புதிது, புதிதாக என்ட் டூ என்ட், ஒன் டூ ஒன் என்று பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தற்போது குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி-நெல்லை இடையே இயக்கப்படும் பஸ்களில் நகர எல்லைக்குள் மட்டும் நடத்துநர்கள் பஸ்சில் பயணம் செய்து டிக்கெட் வழங்கும் திட்டத்தை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்களில் நடத்துநர்கள் ஆட்சியர் அலுவலகம் வரை சென்று விட்டு, மீண்டும் நெல்லையில் இருந்து வரும் பஸ்சில் ஏறி தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்துக்கு வந்து சேருகின்றனர். இதே போன்று நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்சில் கே.டி.சிநகர் வரை மட்டுமே நடத்துநர் வருகிறார். அதன்பிறகு இறங்கி மீண்டும் நெல்லை செல்லும் பஸ்சில் சென்று விடுகிறார். இது பயணிகளுக்கும், நடத்துநர்களுக்கும் பயன்தராத திட்டமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.




குறிப்பாக நடத்துநர்கள் டிக்கெட் போட்ட வசூல் பணத்துடன் நடுரோட்டில் நின்று கொண்டு இருக்கும் நிலை உள்ளது. இதனால் யாரேனும் வழிப்பறி செய்து விட்டால், அதற்கு நடத்துநர்களே முழு பொறுப்பேற்கும் நிலை உள்ளது. இதனால் நடத்துநர்கள் இறங்கும் இடத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு தற்காலிக அலுவலகம் அமைக்க வேண்டும். அங்கு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். நடத்துநர்கள் அங்கு பாதுகாப்பாக இருந்து கொண்டு, அடுத்த பஸ்சில் மீண்டும் பஸ் நிலையத்துக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் நடத்துநர் டிக்கெட் கணக்குகளை முடித்து ஒப்படைக்கும் வரை பஸ்சை ஓரம்கட்டி நிறுத்தி விடுகின்றனர். இதனால் தாமதம் ஏற்படுகிறது. அதே போன்று இரவு நேரங்களில் நடுவழியில் கண்டக்டர்கள் நிற்க வேண்டி இருக்கும். இதனால் ஏதேனும் பிரச்சினை வராமல் தடுப்பதற்காக பஸ் நிலையத்திலேயே டிக்கெட் கொடுத்து முடித்து விடுகின்றனர். அதன்பிறகு ஆட்சியர் அலுவலகம் வரை உள்ள பஸ் நிறுத்தங்களில் ஆட்களை ஏற்றாமல் சென்று விடுகின்றனர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் கூடுதலாக அனைத்து ஊர்களிலும் நின்று செல்லும் வகையிலான பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த பஸ்  நடத்துநர் கூறும் போது, தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு ஒன் டூ ஒன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 12 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் போதுமான கண்டக்டர்கள் இல்லை. இதனால் தூத்துக்குடி பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை உள்ள பஸ் நிறுத்தங்களில் ஆட்களை ஏற்றி, டிக்கெட் வழங்குகிறோம். தூத்துக்குடியில் இருந்து டிக்கெட் போட்டு கலெக்ட்ரேட்டில் பயணிகள் கூடுதலாக ஏறும் போது டிக்கெட் போட்டு அதை எழுதி டிரைவரிடம் குடுக்க கொஞ்ச நேரமாகும், அதில் பயணிகள் அவ்வப்போது டென்சனாவதும் உண்டு எனக்கூறும் இவர்,அதன்பிறகு நாங்க கலெக்டர் அலுவலகம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் பஸ்சுக்காக காத்து நிற்கிறோம். அதன்பிறகு நெல்லையில் இருந்து வரும் பஸ்சில் ஏறி இடையில் ஏறும் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து பஸ் நிலையத்தை வந்தடைகிறோம்.




கலெக்டர் அலுவலகத்தில் காத்து நிற்கும் போது,இடைப்பட்ட நேரத்தில் பணப்பையை எவனாது பறித்து சென்றாலும் பாதிக்கப்படுவதும் நாங்க தான் என்கிறார். அதே போன்று ரோட்டில் அங்கும் இங்குமாக சென்று பஸ்சை பிடிக்கும் போது விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் கண்டக்டர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். இரவு நேரங்களில் பஸ் நிலையத்தில் மட்டுமே டிக்கெட் போட்டு முடித்து விடுவோம். கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் காத்து இருக்கும் போது அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் அதனை தவிர்த்து வருகிறோம்.  ஆகையால் கண்டக்டர்கள் மாறும் இடத்தில் அரசு போக்குவரத்துகழகம் சார்பில் ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும். அங்கு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். இதனால் கண்டக்டர்கள் அடுத்த பஸ்சில் மாறுவதற்காக அந்த அலுவலகத்தில் பணப்பை, டிக்கெட்டுடன் பாதுகாப்பாக இருக்க முடியும். இதனை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்கிறார்.