நெல்லை மாநகராட்சி 53 வது வார்டுக்குட்பட்டது எழில் நகர் பகுதி.. இங்கு அமைந்துள்ள குடிநீர் தொட்டி மூலம் 53 மற்றும் 54 வது வார்டில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் அத்தொட்டியில் ஒரே ஒரு வால்வு மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் 53வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சரிவர குடிநீர் வருவதில்லை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர்.. இதுகுறித்து அந்த வார்டை சேர்ந்த கவுன்சிலர் அம்பிகாவும், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளார். இருப்பினும் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் கவுன்சிலர் அம்பிகா தலைமையில் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமின்போது மேயர் சரவணனை சூழ்ந்து கொண்டு மனு அளித்தனர்.
அப்போது பேசிய கவுன்சிலர் அம்பிகா, எங்கள் பகுதியில் பல வீடுகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை, அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரில் சென்றாலும் அவர்களை பார்க்க முடியவில்லை. நான் கவுன்சிலரான பிறகு தான் தண்ணீர் பிரச்சனை இருப்பதாக மக்கள் என்னிடம் முறையிடுகின்றனர். எனவே தான் மக்களை உங்களிடம் அழைத்து வந்துள்ளேன். எனவே உடனே பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று முறையிட்டார். அதற்கு மேயர் சரவணன் அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து இது குறித்து கவுன்சிலர் அம்பிகா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, “எங்கள் பகுதிக்கு வரக்கூடிய தண்ணீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை, இதனால் வாரத்தில் ஒரு நாள் தான் தண்ணீர் வருகிறது. மக்கள் ரொம்ப கஷ்டப்படுகின்றனர். அத்தியாவசிய தேவையான தண்ணீர் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. இதனை உடனே சரிசெய்ய வேண்டும் என்று மனு அளிக்க வந்துள்ளேன். குறிப்பாக ரோஜா நகர், ராம்விலாஸ் நகர், உதயா நகர், நியூ காலனி, சரோன் நகர், ஐயப்பன் நகர் என பல்வேறு பகுதிக்கு தண்ணீர் செல்கிறது. 400 வீடுகளுக்கு மேல் இருப்பதால் இரண்டு வால்வுகள் வைத்து தரும்படி முறையிட்டு வருகிறோம். அதேபோல குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும், குறைந்தபட்சம் அடிக்கடி பழுதாகும் குடிநீர் குழாயை மாற்றி கொடுத்தால் இப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்.
எனவே இதை சரிசெய்ய மேயரிடம் பல முறை மனு அளித்துள்ளோம். அதிகாரிகளிடமும் பலமுறை மனு கொடுத்துள்ளோம். வார்டு குழு கூட்டத்திலும் இது குறித்து பேசி உள்ளேன். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் மக்களோடு வந்து விட்டேன். அடுத்த கட்டமாக மக்கள் எல்லோரும் போராட்டத்தில் இறங்குவார்கள்” என்று தெரிவித்தார். கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் மக்களுடன் திரண்டு வந்து குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி மேயரிடம் முறையிட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்