நெல்லையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நெல்லை,  தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அண்மைக்காலமாக வன்முறைகள் அதிகரித்துள்ளது. இது பெரும்பாலும் சாதிய ஒடுக்குமுறை சம்பவங்களாக இருக்கிறது. சாதாரண ஏழை, எளிய மக்கள் மீது ஏவப்படக்கூடிய வன்முறையாகும். இது போன்ற சம்பவங்களில் இளைஞர்கள், பள்ளி மாணவர்களே அதிகம் ஈடுபடுகின்றனர். தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் வன்முறைகளை தடுக்க மாநில அரசிடமிருந்து எந்தவிதமான ஆக்கபூர்வமான செயல்பாடுகளும் வெளிவரவில்லை.


தென் மாவட்டங்களில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் நிலங்களை, சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இது குறித்து காவல்துறை மேலோட்டமாக விசாரிப்பதால் எந்த பயனும் இதில் இருக்காது. அந்த சம்பவத்தை மட்டும் தான் விசாரிக்க முடியுமே தவிர இதில் இருக்கும் சமூக ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க வேண்டும் என்றால் தென் தமிழகத்தில் அமைதியை கொண்டு வர வேண்டும் என்றால், தென் தமிழகத்தில் அதிகரித்து வரும் இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் மத்திய அரசு சிறப்பு புலனாய்வை அனுப்பி வைக்க வேண்டும். ஜாதி ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளான இந்த மாவட்டங்களிலெல்லாம் வேறு விதமாக அணுகி மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் சேர்ந்து செயல்பட்டால் தான் ஒரு நிரந்தரமான தீர்வு வரும். வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சினையாக அணுகினால் தீர்வு வராது" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "தென் மாவட்டங்களில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை காவல்துறை முறையாக விசாரிக்காமல் ஒன்பது, பத்து ஆண்டுகள் இழுத்தடித்து நீர்த்துப்போக செய்யும் நோக்கில் நடந்து வருகின்றனர், இது கிரிமினல் குற்றம் செய்பவர்களுக்கு ஏதுவாக அமைகிறது. தென் மாவட்டங்களில் நடைபெறுவது இன அழிப்பு, இதனால் இதனை இரும்பு கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே அமைதியை  கொண்டு வர முடியும். எனவே மத்திய அரசு அதன் புலனாய்வு துறைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பி உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை அமைத்து ஏன் தென்தமிழகத்தில் இது போன்ற வன்முறை நடக்கிறது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். காவல்துறையில் செயல்படும் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் ஜாதிய நோக்கத்தோடு செயல்படுகின்றனர். இதன் காரணமாகவே வன்முறைகள் நடைபெறுகிறது. தென்தமிழகத்தில் நடைபெறும் வன்முறைக்கேற்ப காவல்துறை மற்றும் அரசின் நடவடிக்கை இல்லை. இதனால்  மத்திய அரசு தனது ஏஜென்சியை பயன்படுத்தி தீர்வு காண வேண்டிய சூழல் இருக்கிறது.  காவல்துறை, உளவுத்துறை, அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள் என அனைவரும் ஒரே கூட்டணியில் சேர்ந்து செயல்பட்டு வருவதால் தான் இது போன்ற ஜாதிய வன்முறைகள் தென் மாவட்டங்களில் நடைபெறுகிறது” என கூறினார்.