நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் வானமாமலை (50). இவர் நாங்குநேரி நீதிமன்றம், தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் தனியார் தொலைக்காட்சியின் நிருபராகவும் உள்ளார்.  இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வானுமாமலை அவரது மனைவியுடன் சென்று 9 மணியளவில் கடையை திறந்துள்ளார். கடையை திறந்த சில மணி நேரங்களிலேயே அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடையை நோக்கி வீசியுள்ளனர். அந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது வெடிகுண்டை எடுத்து வீசும் போது கடையில் முன்பு விழுந்து வெடித்துள்ளது. இதில் கடையின் முன்பு இருந்த போர்டு உள்ளிட்ட பொருட்கள் லேசான சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது குண்டை எடுத்த அவர்கள் அதனை கீழே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளனர். உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாங்குநேரி போலீஸ் டிஎஸ்பி அசோக் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு வெடிக்காமல் கிடந்த நாட்டு வெடிகுண்டை கைப்பற்றியும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணையானது நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 


இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக மறுகால்குறிச்சியை சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகனான 12 ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு செய்தியாளர் வானமாமலை வீட்டின் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் எதற்காக இந்த குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது என போலீசார் அந்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்டதில், மாணவன் மீது அடிதடி வழக்கு ஒன்றில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது அது செய்தியாக நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. செய்தியாளர் வானமாமலை அந்த நாளிதழில் இதற்கு முன் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் அந்த நாளிதழில் இருந்து தனியார் தொலைக்காட்சியில் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் மாணவன் குறித்த செய்தி  நாளிதழில் இவர் தான் வெளியிட்டுள்ளார் என எண்ணி 12 ஆம் வகுப்பு மாணவன் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.