ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள ராமர் பாதம் செல்லும் சாலையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் மற்றும் அகில இந்திய வானொலி நிலையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த தொலைக்காட்சி நிலையத்தில் டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட மாநிலங்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை ராமநாதபுரம் மற்றும் இலங்கை வரையிலும் ஒலிபரப்பு செய்யப்படும். இந்நிலையில் தற்போது நவீன தொழில்நுட்பத்தால் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவிட்டது. இதனால் ராமேஸ்வரத்தில் செயல்பட்டுவந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் கடந்த 31 டிசம்பர் 2021 அன்று மூடப்பட்டுவிட்டதாக அறிவித்து அதிகாரிகள் நிரந்தரமாக மூடியுள்ளனர். மேலும் இந்த தொலைக்காட்சி நிலையத்தில் செயல்பட்டுவந்த அகால இந்திய வானொலி நிலையம் வழக்கம்போல செயல்படும் என தெரிவித்துள்ளனர்.




மத்திய அரசின் தூர்தர்ஷன் தரைவழி ஒளிபரப்பு சேவையை கடந்த  டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறுத்துவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள 400க்கும் மேற்பட்ட தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழி ஒளிபரப்பு சேவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தூர்தர்ஷன் நிலையம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் தனது 25 ஆண்டுகால பொதிகை தரைவழி ஒளிபரப்பு சேவையை முடித்து கொண்டது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழி ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட நிலையில், பிரசார்பாரதி நிறுவனம் தற்போது நடைமுறையில் உள்ள அனலாக் டிரான்ஸ்மீட்டர் தொழில்நுட்பத்தை டிஜிட்டல் தொழில்நுட்பமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தூர்தர்ஷனின் அனைத்து ஒளிபரப்புகளும் டிடிஹெச் சேவை மூலம் தொடர்ந்து கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் தூர்தர்ஷன் பொதிகை சேனல்களை இனிமேல் இதில் பார்க்கலாம். தூர்தர்ஷன் தரை வழி ஒளிபரப்பு சேவை நிரந்தரமாக நிறுத்தப்படுவதால், இதில் பணியாற்றி வரும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.



இந்தியாவில் இருந்து இலங்கையின் ஒலிபரப்பு தொடர்புகளுக்காக கட்டப்பட்ட இந்த டிவி டவர் சுமார் 1060 அடி உயரம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய டவராகும். ரூபாய் ஐந்தரை கோடி நிதியில் , கடந்த 1990ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்டது. 1060 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த உயர் கோபுரத்தில் 285 மீட்டர் உயரத்திற்கு கான்கிரீட் கற்களால் கட்டப்பட்டு, அதன் உச்சி பகுதியில் 45 மீட்டர் உயரத்தில் இரும்பு கம்பிகளால் டவர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த தூர்தர்ஷன் டவரில் சுமார் ரூ.6 கோடி செலவில் ட்ரோன் மூலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.


1995-ஆம் ஆண்டு முதல் இராமேஸ்வரத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தூர்தர்ஷன் நிலையத்திலிருந்து ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பெற்று ராமேஸ்வரத்தில் உள்ள தொலைக்காட்சி நிலையம் மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்தது.இந்த தொலைக்காட்சி நிலையத்தில் அகில இந்திய வானொலி சேவைகளும் செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையானது இலங்கை யாழ்ப்பாணம் மன்னார் உள்ளிட்ட பல பகுதிகள் வரை கிடைத்தது. மேலும் ராமேஸ்வரம் தீவு பகுதி மீனவர்களுக்கு இந்த தொலைக்காட்சி நிலைய உயர் கோபுரம் மீன் பிடித்து கரை திரும்பும் போது ஒரு கலங்கரை விளக்கம் போன்று பயனுள்ளதாக இருந்து வந்தது.




தற்போது வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வளர்ச்சியால் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நிகழ்ச்சியை மக்கள் பார்ப்பது குறைந்து விட்டது. இதனால் இந்தியாவிலுள்ள 412 தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையங்களை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் பணி இழந்து உள்ளனர். தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழி ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட நிலையில், பிரசார் பாரதி நிறுவனம் தற்போது நடைமுறையில் உள்ள அனலாக் டிரான்ஸ்மீட்டர் தொழில்நுட்பத்தை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தூர்தர்ஷனின் அனைத்து ஒளிபரப்புகளும் டி.டி.எச் சேவை மூலம் தொடர்ந்து கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் பொதிகை சேனல்களை இனிமேல் இதில் பார்க்கலாம்.



ராமேஸ்வரம் தூர்தர்ஷன் டிவி டவர் இரண்டரை ஏக்கர் இடத்தில் அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய டவர், உலகளவில் 32-வது ரேங்கில் இருந்தது. திருநெல்வேலி, தென்கரைக்கோட்டை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கொடைக்கானல் ஆகிய தூர்தர்ஷன் நிலையங்கள் அக்டோபர் 31 அன்று தனது சேவையை நிறுத்திக் கொண்டதன காரணமாக சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் பணி இழந்து உள்ளனர். 25 ஆண்டுகள் பயணித்த ராமேஸ்வரம் டிவி டவர் தனது தரைவழி ஒளிபரப்பை அன்றுடன் முடித்துக் கொண்டாலும், வெவ்வேறு வடிவங்களில் பயணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக  இருக்கிறது.