நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சைமன், இவர் நேற்று நள்ளிரவு வீட்டின் முதல் மாடியில் உள்ள  கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டின் கீழே உள்ள அறைகளில் குடும்பத்துடன் உறங்கியுள்ளார். இதனை நோட்டமிட்ட நபர் நள்ளிரவு முதல் மாடிக்கு சுவற்றின் மீது ஏறி அந்த வழியாக உள்ளே  புகுந்துள்ளார். பின்னர்  மாடியில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த  50 சவரன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அதே பகுதிகளில் அடுத்த அடுத்த 4 வீடுகளில் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர் ஒரு கும்பல். ஆனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். அருகில் வேறு ஏதேனும் வீடுகளில் திருடு போயுள்ளதா என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது,




இது குறித்து அப்பகுதி மக்கள் உவரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  தகவலின் அடிப்படையில் வந்த போலீசார் அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்த  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.. அதில் நள்ளிரவில்  வாலிபர் ஒருவர் தலையில் துணியை கட்டிக் கொண்டு, சட்டை இல்லாமல் லுங்கி அணிந்தபடி மடியில் ஆயுதத்தை துணியால் சுத்தி வைத்துக்கொண்டு வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில்  ஏறி குதித்து வீட்டிற்குள் செல்லும்  காட்சி பதிவாகி உள்ளது. பின்னர் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளார்,




சிசிடிவில் பதிவான வீடியோ காட்சி 👇






இந்த பதிவுகளின் அடிப்படையில் இந்த வாலிபர் யார்? இந்த கொள்ளை சம்பவத்தில் தனியாக ஈடுபட்டாரா அல்லது வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், இதற்கு முன் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களின் தகவல்களை திரட்டி சிசிடிவி பதிவில் உள்ள நபருடன் ஒத்துப்போகிறதா என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி கொள்ளையனை தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற கொள்ளை சம்பவங்கள் நடைபெறா வண்ணம் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்,  திசையன்விளையில் ஒய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனதை தொடர்ந்து அடுத்த அடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.