நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கே பி கே ஜெயக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை, கண்டுபிடித்து தர வேண்டுமென அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்திலேயே  ஜெயக்குமார் உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை உவரி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து இன்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில் அவர் மாவட்ட காவல்துறைக்கு தனது கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் பணத்தை பெற்றுக்கொண்டு மிரட்டி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை மரண வாக்கு மூலமாக எழுதியது வெளியானது. அது காவல்துறையினரிடம் புகாராக கொடுக்காத நிலையில் சமூக வலைதளங்களில் பரவியது பரபரப்பாக பேசப்பட்டது. 




இந்த  நிலையில் தற்போது தனது மருமகனுக்கு 27 ஆம் தேதியில் ஜெயக்குமார் எழுதிய கடிதம் ஒன்றும், 30 ஆம் தேதி தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதம் என மேலும் 2 கடிதம் வெளியாகியுள்ளது. அதில் அன்பு மருமகன் ஜெபாவுக்கு என் மீது கொண்ட பாசத்தாலும் நான் உன் மீது கொண்ட நம்பிக்கையாலும் இந்த கடிதத்தை உனக்கு எழுதுகிறேன் வர வேண்டிய கொடுக்க வேண்டிய பணங்களை குறிப்பிடுகிறேன் என 16  பேரின் பெயரை குறிப்பிட்டு எழுதி உள்ளார். குறிப்பாக ரூபி மனோகரன் எம்எல்ஏ 78 லட்சம், கே.வி தங்கபாலு 11 லட்சம் ஆக மொத்தம் 89 லட்சம் வழக்கு தொடர்ந்து வாங்க வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும்  நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் என வாங்க வேண்டியவர்கள், கொடுக்க வேண்டியவர்கள் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் பெயர்கள் அதிகம் அந்த கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.. 




அதே போல தனது மொத்த குடும்பத்தினருக்கு என எழுதிய கடிதத்தில், தனது மகளின் கல்யாணத்தை அனைவரும் சிறப்பாக நடத்தி கொடுத்தீர்கள். எனது அன்பு உங்கள் அனைவர் மீதும் எப்போதும் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.  அதோடு குடும்பத்தினர் யாரும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களை பழிவாங்க  நினைக்க வேண்டாம். சட்டம் தன் கடமையை செய்யும் என்று முடித்துள்ளார். இந்த கடிதம் தற்போது வெளியாகி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதிய இந்த கடிதத்தின் அடிப்படையில் பார்த்தால் மரண வாக்குமூலம் என ஆரம்பித்து சொத்து கணக்கு விவரங்களை குடும்பத்தினருக்கு தெரிவித்து விட்டு தற்கொலை தான் செய்து கொண்டாரா என கேள்வி எழும் அதே நேரம், அவரது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறும் பொழுது கொலையா இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் காவல்துறையின் முழு விசாரணையில் கிடைக்கப்பெறும் தகவல்களில் தான் உண்மை தெரிய வரும்.. ஜெயக்குமாரின் உயிரிழப்பின் பின்னால் எழும் கேள்விகளுக்கும், மர்மங்களுக்கும்  காவல்துறை தான் உரிய விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.