நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் கேபிகே ஜெயக்குமார். இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூர் பகுதியை சேர்ந்தவர். பாரம்பரிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவருக்கு ஒரு மனைவி இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு மேலாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். கேபிகே ஜெயக்குமார் கடந்த 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாருக்கு புகார் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தனது வீட்டை சுற்றி சில நபர்கள் வருவதாகவும் திருடு உள்ளிட்ட சம்பவத்தில் ஈடுபட முயற்சி நடப்பதாகவும், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதாகவும்  காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களை சுட்டிக்காட்டி நான்கு பக்க புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி இரவு முதல் தனது தந்தையை காணவில்லை என கூறி நெல்லை மாவட்டம் உவரி காவல் நிலையத்தில் கேபிகே ஜெயக்குமார் மகன் கருத்தையா ஜெப்ரின் புகார் ஒன்றை அளித்தார்.


அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் உவரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன் மூன்று தனி படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டனர். இந்த சூழலில் கரைசுத்து புதூர் பகுதியில் உள்ள ஜெயக்குமார் இல்லத்திற்கு பின்புறம் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தென்னை மற்றும் தேக்கு மரங்கள் அமைந்துள்ள தோப்பு பகுதியில் இன்று காலை பணிக்கு சென்ற நபர்கள் எரிந்த நிலையில் உடல் ஒன்று தோட்டத்தில் இருப்பதை பார்த்து காவல்துறையினர் மற்றும் ஜெயக்குமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் பார்த்த போது பாதி எரிந்த நிலையில் இருக்கும் உடல் ஜெயக்குமார்  என உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வள்ளியூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்தில் தடைய அறிவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்றது.


மேலும் சம்பவத்தை முதலில் பார்த்தவர்கள் அங்கு இருந்தவர்கள் உறவினர்கள் என பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் புகார் தாரரான கருத்தையா ஜெபரின் மற்றும் ஜெயக்குமார் மனைவி உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கே பி கே ஜெயக்குமார் ஆதரவாளர்கள் என திரளானோர் கே பி கே ஜெயக்குமார் இல்லத்தில் குவிந்தனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உடற்கூறு ஆய்வுக்கு பின் உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உடற்கூறு  ஆய்விற்காக அனுப்பப்பட்ட உடலில் கம்பிகள் சுற்றி இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உவரி காவல்துறையினர் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.


நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் உயிரிழந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 30ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்த புகாரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பெயர்கள் அடங்கிய புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய விசாரணையை காவல்துறையினர் நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.