திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் நேற்று அவர் மர்மமான முறையில் திசையன் விளை அருகே கரைசுத்து புதூரில் அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய நிலையில் அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே தனது தந்தையை காணவில்லை என ஜெயக்குமாரின் மகன் கருத்தையா சாப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூல கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அவர் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்  தங்கபாலு உட்பட ஆறு பேர் பெயரை குறிப்பிட்டு தனக்கு அவர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


எனவே அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவரது இறப்பில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் காவல்துறை பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக அவர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பெயரை குறிப்பிட்டு மரண வாக்குமூலம் எழுதியிருந்த நிலையில் கட்சியினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அவர் இறந்த நிலையில் இருந்த போது காலில் கம்பி சுற்றி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவரை யாரேனும் கட்டி போட்டு கொலை செய்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. மேலும் ஜெயக்குமார் மாவட்ட எஸ்பிக்கு எழுதிய புகார் கடிதத்தை காவல்துறையினரிடம் கொடுக்காத நிலையில் அந்த கடிதம் எவ்வாறு சமூக வலை தலத்தில் பரவியது என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் கொலையா தற்கொலையா என்ற விவரம் தெரிய வரும்...


 


இச்சூழலில் ஜெயக்குமார் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உடற்கூறு ஆய்வு செய்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவரது உடல் மகன் கருத்தையா ஜாப்ரினிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று பிற்பகல் ஜெயக்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மறைந்த ஜெயக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் மாநகர தலைவர் செல்வ பெருந்தகை இன்று ரயில் மூலம்  நெல்லை வந்தார். தொடர்ந்து அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் கரைசுத்துப்புதூரில் நடக்கும் அவரது இறுதி  நிகழ்ச்சியில் செல்வப் பெருந்தகை பங்கேற்க இருக்கிறார். அதே போல காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், கன்னியாகுரி எம்.பி விஜய்வசந்த் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து ஜெயக்குமாரின் உடல் சொந்த ஊரான கரைச்சுத்து புதூர் கிராமத்திற்கு நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.