திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் முழு நேர அன்னதான திட்டத்துக்கு முறையான அறிவிப்பு இல்லாமல் ஆளும் திமுக நிர்வாகிகள் தலையீட்டில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவதாக கூறி பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 


                                  

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் முழு நேர அன்னதான திட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஏற்கனவே இருக்கும் சமையல் மாஸ்டர், உதவியாளர்கள், தனியார் காவலாளிகள் மூலம் தற்போது அன்னதான உணவு பரிமாறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கோயிலில் முழு நேர அன்னதான திட்டத்துக்கு கூடுதலாக சமையல் மாஸ்டர், உதவி சமையல் மாஸ்டர், மேற்பார்வையாளர், சப்ளையர் உள்ளிட்ட 60 பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்த பணி நியமனம் தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் முறையான எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பத்திரிக்கைகளில் செய்தி மற்றும் விளம்பரம் வெளியிடப்படவில்லை. கோயில் அலுவலக தகவல் பலகையில் அறிவிப்பு ஏதும் ஒட்டப்படவில்லை. ஆளும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் தலையிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை, பணம் வாங்கிக் கொண்டு இந்த பணிக்கு நியமனம் செய்து வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


                                  

மேலும் இதனை கண்டித்தும், முறையாக அறிவிப்பு செய்து அரசு விதிகள்படி பணி நியமனம் செய்ய வலியுறுத்தியும் பாஜக மகளிரணி பொதுசெயலாளர் நெல்லையம்மாள் தலைமையில் அக்கட்சியினர் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தலைமையில் போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். போராட்டம் நடத்திய பாஜகவினருடன் கோயில் நிர்வாகம் சார்பில் யாரும் பேச்சுவார்த்தை நடந்த வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் இணை ஆணையர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

 

இது தொரடர்பாக தகவல் அறிந்து பாஜக மாவட்ட பொதுசெயலாளர் சிவமுருக ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் அங்கு வந்து அவர்களுடன் இணைந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இணை ஆணையர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி முறையான விளக்கம் அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் எனக் கூறி அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தார்கள்.


                                  

இந்நிலையில் இணை ஆணையர் குமரதுரை அந்த வழியாக வந்தார். அவரை பாஜகவினர் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இதையடுத்து அன்னதான திட்டத்துக்கான பணியாளர் நியமனம் குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன் பிறகே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என இணை ஆணையர் உறுதியளித்தார். அதன்பேரில் பாஜகவினர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.