தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் நெய்தல் தூத்துக்குடி கலைவிழா ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த விழா தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் இன்று முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 300 கிராமியக் கலைஞர்கள் பங்கேற்று கிராமிய கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.




இதனை முன்னிட்டு தருவைகுளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இந்த ஓவியங்களை தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது, அவர்கள் சுவர்களில் ஓவியம் வரைந்து கலைஞர்களை ஊக்குவித்தனர். பின்னர் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.




பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., ”தூத்துக்குடியில் வருகிற 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நெய்தல் கலை விழா நடத்த உள்ளோம். இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நம் மண் சார்ந்த கிராமிய கலைஞர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் வந்து கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி நடத்துகின்றனர். அதன் ஒருபகுதியாக உணவு திருவிழாவும் நடக்கிறது. இந்த பகுதியில் உள்ள கைவினை கலைஞர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களும் அரங்குகளில் விற்பனை கண்காட்சியாக வைக்கப்படுகிறது.




தருவைகுளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சுவர்களில் அரவாணி ஆர்ட் புராஜெக்ட் நிறுவனம் சார்பில் ஓவியம் தீட்டி உள்ளோம். இந்த தூத்துக்குடி மக்களின் வாழ்வியல் மட்டுமின்றி, நம் மண் சார்ந்த கலை வடிவங்கள் ஓவியமாக தீட்டப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளித்து உள்ளனர். இந்த நிகழ்வு மக்களுக்கு சென்றடைய வேண்டும். கலைஞர்களுக்கு தொடர்ச்சியாக அதிகமாக நிகழ்ச்சிகள் கிடைக்க வேண்டும், நம் பாரம்பரியமான கலைகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும்.




இந்த கலைவிழாவுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மண் சார்ந்த கலைகளுக்கு தொடர்ந்து வரவேற்பு உள்ளது. இது போன்ற கலைவிழாவை தூத்துக்குடியில் முதல் முறையாக நடத்துகிறோம். கடந்த தி.மு.க. ஆட்சியில் தஞ்சை பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறக்கலை படிப்புக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டது. நம் வாழ்வியலை சொல்லக்கூடிய நாட்டுப்புறக்கலையை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு அங்கீகாரம் நிச்சயம் தேவை என்றார்.