தீபாவளி என்றதும் புத்தாடைகளும், பட்டாசுகளும் மட்டுமின்றி வீட்டில் செய்யும் பலகாரங்களும் நினைவுக்கு வரும். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வீட்டில் உள்ள பெரியவர்களால் தீபாவளிக்கான பலகாரங்கள் செய்வது வழக்கம். ஆனால் தற்போதைய காலத்தில் வீட்டில் உள்ள அனைவரும் பணிக்கு செல்லும் சூழல் இருப்பதால், தீபாவளி பண்டிகைக்கான பலகாரங்களை பெரும்பாலும் கடைகளில் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். பலகார கடைகளும் மக்களை கவரும் வகையில் விதவிதமாக இனிப்புகளை தயாரித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றது. குறிப்பாக நெல்லை மாவட்டம் என்றாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும் இருட்டு கடை அல்வாவிற்கு தனி சிறப்பு உண்டு. நெல்லையின் சிறப்பு அடையாளங்களில் ஒன்றான  இனிப்பு பண்டமான அல்வாவும் தீபாவளி விற்பனையில் கூடுதல் இடம் பிடித்துள்ளது. 




அல்வா என்றாலே கோதுமை பால், சீனி, நெய் கொண்டு தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக அல்வா தயாரிப்பில் புதிய புதிய வகைகளை அறிமுகப்படுத்தி அசத்தி வருகின்றனர். குறிப்பாக ரோஜா பூ அல்வா, வெள்ளரி அல்வா, கருப்பட்டி அல்வா, தஞ்சாவூர் பகுதிகளில் பிரபலமான அசோகா அல்வா என பல வித அல்வாக்கள் தயார் செய்யப்படுகிறது. நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான ராம் லாலா ஸ்வீட், டவுணில் 100 ஆண்டுகள் பழமையான  வாகையடி  லாலா போன்ற கடைகளில் அல்வா தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டும் புதுமையாக இளநீர் அல்வா, கருப்பட்டி அல்வா, அத்திப்பழம் அல்வா என 20 க்கும் மேற்பட்ட அல்வாக்களை தொழிலாளர்கள் தயாரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். தென்னை மர இளநீரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அல்வா, பன்னீர் அல்வா, ரோஸ் அல்வா, அத்திப்பழம் அல்வா போன்றவையும் மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.





இதுகுறித்து அவர்கள் கூறும் பொழுது, மக்களுக்கு ஆண்டுதோறும் புதிய வகைகளில் அல்வாவை அறிமுகப்படுத்தி வருகிறோம். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கொடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு தீபாவளியை போலவே இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக அமையும் என எதிர்ப்பார்க்கிறோம்.  குறிப்பாக  அல்வாக்களில் கருப்பட்டி அல்வா, பால் அல்வா, மஸ்கோத் அல்வா, கேரட் அல்வா, பைனாப்பிள் அல்வா, ரோஜா அல்வா, வெள்ளரி மற்றும் தடியங்காய் அல்வா என இனிப்பு பலகாரங்களில் மருத்துவ குணம் சேர்த்து நாங்கள் தயாரித்து கொடுத்து வருகிறோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இளநீர் அல்வாவை பொறுத்தவரை தென்னைமர இளநீரை பயன்படுத்தி அதனுடன் மக்காச்சோள மாவு மற்றும் சீனி, இளநீரில் ஊற வைக்கப்பட்ட சப்ஜா விதைகள், இளநீர் எடுத்தபின் இருக்கும் வழுக்கைதேங்காய், தேவையான அளவு ரீபைண்ட் ஆயில் சேர்த்து இளநீர் அல்வா தயார் செய்கிறோம். இதே போன்றே மற்ற அல்வாக்களும் தயார் செய்யப்படுகிறது. இவை அனைத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. எப்போதும் தயாரிக்கப்படும் அல்வாவுக்கும், விதவிதமாக தயாரிக்கப்படும் அல்வாவுக்கும் விலையில் சிறிய அளவு மட்டுமே வித்தியாசம் உள்ளது. மக்கள் நல்ல பொருட்களை ஏற்றுக் கொள்கிறார்கள். விலையை பொருட்படுத்துவதில்லை என்கின்றனர்.


இது ஒரு புறமிருக்க 1940களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் மின்சார விளக்குகள் இன்றி துவங்கப்பட்ட இருட்டு கடை அல்வா தற்போது 3வது தலைமுறை வாரிசுகளால் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு அருகே இன்றளவும் இருட்டு கடை எவ்வித மாற்றமுமின்றி சிறிய கடையாகவே இயங்கி வருகிறது. இன்றும் அந்த அல்வாவை வாங்க மாலை நேரங்களில் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  இனிப்பு பண்டமான அல்வா விற்பனையும் நெல்லையில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.