தீபாவளி பண்டிகை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.  தீபாவளி நாளில் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து குழந்தைகள் ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்க, மறுபுறம் உறவினர்கள் நண்பர்களின் சந்திப்பால் வீடுகள் முழுக்க மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். அன்றைய காலத்தில் பண்டிகைக்கு 10 நாட்கள் முன்பாகவே வீடுகளில் பலகாரங்கள் செய்ய தொடங்கி விடுவார்கள். ஆனால் இன்று பெரும்பாலான வீடுகளில் கணவனும், மனைவியும் வேலைக்கு செல்லும் சூழலே இருப்பதால், அருகில் உள்ள கடைகளில் பண்டிகைக்கு தேவையான பலகாரங்களை  வாங்கி கொள்வது வழக்கமாகி விட்டது. மக்களின் தேவைக்கேற்ப தீபாவளிப் பண்டிகைக்கு முன்னமே பலகாரங்களை  செய்யத் தொடங்கி விடுவார்கள். இந்த ஆண்டும் தீபாவளிக்காக அரிசி மாவில் செய்யப்படும் கை சுற்று முறுக்கு, அதிரசம், அச்சு முறுக்கு, தட்டை, முந்திரி கொத்து போன்ற பலகாரங்கள் தற்போது நெல்லை, பாளையங்கோட்டை சுற்றுவட்டார பலகார கடைகளில் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர்.




குறிப்பாக நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் பலகாரங்களை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்து பலகாரங்களை செய்து வருகின்றனர். புழுங்கல் அரிசியை ஊற வைத்து அரைத்து அந்த மாவை கைகளால் சுற்றி எண்ணெய்யில் முறுக்கு பொறித்து எடுக்கப்படுகிறது. அதேபோல அரிசி மாவு, கடலை மாவு, பருப்பு மற்றும் காரத்திற்கான பொருட்கள் சேர்த்து தட்டை செய்யப்படுகிறது. குழந்தைகள் விரும்பி உண்ணும் அச்சுமுறுக்கு, சீடை, நெய் விளங்கா, முந்திரி கொத்து போன்றவையும் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது, பெண்களே தங்களது கை பக்குவத்தில் செய்யும் இந்த பலகாரங்கள் ருசிக்காக ஆர்டர்களும் அதிக அளவில் குவிந்து வருகிறது. அதே போல நெல்லை மாவட்டம் மட்டுமின்றி மற்ற மாவட்டங்கள் தாண்டி வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக முறுக்கு 6 ரூபாய்க்கும், அதிரசம் 6 ரூபாய்க்கும், தட்டை 5 ரூபாய்க்கும், அச்சு முறுக்கு 5 ரூபாய்க்கும், தேன்குழல் முறுக்கு 7 ரூபாய்க்கும், நெய் உருண்டை 7 ரூபாய்க்கும், முந்திரி கொத்து 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


 



 


நெல்லையின் சிறப்பு பலகாரங்களில் ஒன்றாக முந்திரி கொத்தும் உள்ளது. அதே போல இங்குள்ள கை சுற்று முறுக்குக்கும், அதிரசத்திற்கும் மவுசு அதிகம். இது குறித்து அங்கு பணியாற்றும் பெண்கள் கூறும் பொழுது, இந்த வருடம் முறுக்கு, அதிரசம் போன்றவற்றிற்கு ஆர்டர்கள் அதிகம் வருகிறது, ஆனால் அவர்களின் தேவைக்கேற்ப எங்களால் செய்து கொடுக்க முடியவில்லை, பணியாளர்களும் பற்றாக்குறை உள்ளது. இருப்பினும் எங்களால் முடிந்த அளவு வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்.  கடந்த 10 நாட்களாகவே அதிகமான வேலை இருந்து வருகிறது. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் கடைசி 2 நாட்கள் அதிக அளவில் ஆர்டர்கள் வரும். எப்படி சமாளிக்கப் போகிறோம், ஆர்டர்களை எவ்வாறு பூர்த்தி செய்ய போகிறோம் என்று தெரியவில்லை. இருப்பினும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடிந்த அளவு வேலை செய்து வருகிறோம். அதிக சுவையும், தரமும் இருப்பதால் வாடிக்கையாளர்கள் தேடி வருகின்றனர் என்கின்றனர். இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலகாரங்கள் செய்யும் பணியில் முழு வீச்சில் ஊழியர்கள் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.