நெல்லை மாநகர காவல் ஆணையாளராக பதவி வகித்து வந்த மகேஸ்வரி ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய மாநகர காவல் ஆணையாளராக மூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் இன்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.  அப்போது நெல்லை மாநகர காவல் துறை சார்பில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து கோப்புகளில் கையெழுத்து பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்பொழுது, வரலாற்று சிறப்பும் புகழும் மிக்க திருநெல்வேலி மாநகரத்தில் காவல் ஆணையாளராக இன்று பொறுப்பேற்பது கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய சூழலில் திருநெல்வேலி   மாநகர மக்கள் பெருமழையால் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர், அந்த பெருந்துயர் துடைக்கும் அரசின் பணியில் காவல்துறை மிகவும் ஒத்துழைப்போடு நடந்து கொள்ளும், எனவே நெல்லை மாநகரத்தில் சமயம், சாதி, எந்த பிணக்குகளும் ஏற்படாத வண்ணம், இதனால் மோதல்கள் ஏற்படாத வண்ணம் சட்டம் ஒழுங்கை  மிக கட்டுக்கோப்பாக நடத்தும் பணியில் ஏற்கனவே  இம்மாநகர காவல்துறை மிக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. 


என்னுடைய முதல் பணியாக அப்பணியை இன்னும் உத்வேகப்படுத்தி இம்மாநகரை  சண்டை, சச்சரவுகள் இல்லாத ஒரு மாநகராகவும், குற்றச் செயல்கள் இல்லாத ஒரு மாநகராகவும்  உருவாக்கும் நிலையை தொடர்ந்து இம்மாநகர காவல்துறை செய்ய  நான் உத்வேகமாக இருப்பேன் என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், காவல் அலுவலர்களும், காவலர்களும், பொதுமக்களும் மாநகர காவல்துறைக்கு பெரும் உதவியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சமய சாதி பிணக்குகள் வராதவாறு அவர்கள் ஒற்றுமையாக இருக்கும் விதமாக விழிப்புணர்வு கொடுக்கப்படும். அதே போல பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான தகவல் கிடைத்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. அது குறித்த விழிப்புணர்வும் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும். இங்குள்ள காவல்துறையினர் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதை பார்த்து எந்தெந்த விசயங்களுக்கு, இங்குள்ள பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதன்படி  முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார், 


இவர் புதுக்கோட்டையில் துணை கண்காணிப்பாளராக தனது பணியை தொடர்ந்த இவர் திருவாரூர், கோவை, திருச்சி, தாம்பரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றினார், கடந்த  2020 ஆம் ஆண்டு இவரின் தந்தை பால்சாமி கொரோனாவல் உயிரிழந்தார். அதன் பின்னர் தனது சொந்த வீட்டை புனரமைத்து பாலா படிப்பகம் என நூலகமாக மாற்றினார்,தனது கிராமத்திற்காக தனது சொந்த முயற்சியில் இவர் எடுத்த முன்னெடுப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.