தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியை சேர்ந்த சேக் மீரான்-சைத்தூன் பீவி தம்பதியினரின் 2-வது மகள் நிகர்சுல்தான் ஆவார். இவரது தற்போதைய பெயர் நிகர்ஷாஜி. இவர் செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1978-79-ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பயின்று 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். அதேபோல், 12-ம் வகுப்பில் 1980-81 ஆம் கல்வியாண்டில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். அதன்பின் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை முடித்த நிகர்ஷாஜி 1987- ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு இஸ்ரோ நிர்வாகத்தால் திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டார். அப்போது தான் நிகர் ஜாஜி குறித்து மிகவும் பேசப்பட்டது.





இந்த நிலையில் ஆதித்யா - எல்1 திட்ட இயக்குனர் நிகர்ஜாஜி சார்பில் அவர் படித்த தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஆரியநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் SRM அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவைகளில் அறிவியல் ஆய்வு கூட கட்டிடம் மற்றும் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு டாய்லெட் வசதி ஏற்படுத்திக் கொடுக்க உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நிகர்ஜாஜி சார்பில் ரூ. 11 லட்சத்திற்கான காசோலையை நிகர் ஜாஜியின் சார்பில் அவரது சகோதரர் சேக்சலீம் செங்கோட்டை நகராட்சி ஆணையரிடம் வழங்கினார். தான் படித்த பள்ளியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் மாணவர்களின் நலன் கருதி அவர் செய்த இச்செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.


இந்த நிகழ்வின் போது, செங்கோட்டை எஸ்ஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது நிகர் ஜாஜியின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள ரூ.11 லட்சம் நிதியுடன் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பள்ளிகளில் தேவையான கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. திட்ட இயக்குநராக சிறப்பாக செயல்பட்டு தான் படித்த பள்ளிக்கு பெருமை சேர்த்ததுடன் தற்போது அவர் பள்ளிக்காக செய்த நிதியுதவி அவரையும் அவர் படித்த பள்ளியையும் மேலும் பெருமையடையச் செய்துள்ளது.